கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை செய்தவை என்ன? அடுத்து செய்ய வேண்டியவை என்னென்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்துறை எப்படி செயல்பட்டிருக்கிறது? எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதா? மருத்துவத்துறையின் முன் உள்ள கோரிக்கைகள் என்ன? பார்க்கலாம்....
மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்File Image

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்விக்கு ஒரு துறை, பொது சுகாதாரத்திற்கு தனித்துறை என பிரித்து மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது தமிழ்நாடு. இந்த ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்துறை எப்படி செயல்பட்டிருக்கிறது? எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதா? மருத்துவத்துறையின் முன் உள்ள கோரிக்கைகள் என்ன? பார்க்கலாம்....

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிலும் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டதைப் போன்றே மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதி நிலையில் இந்த அளவிற்கு தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றாலும், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கொண்டு வந்த "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களாலும் புகழப்படும் நாட்டின் முன்னோடித் திட்டமாக திகழ்கிறது. இந்த ஒன்றே முக்கால் ஆண்டில் இதுவரை 434 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வீடு தேடிச் சென்று 1 கோடியே 49 ஆயிரம் பேருக்கு இத்திட்டம் மூலம் மட்டுமே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரம் வரை எந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற "நம்மைக் காக்கும் 48" திட்டமும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் மருத்துவத்துறையில் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டங்கள் என்கிறார் மூத்த மருத்துவரும் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினருமான அமலோற்பவ நாதன்.

தமிழக சுகாதாரத்துறை
தமிழக சுகாதாரத்துறை

அதேவேளையில், "தமிழ்நாட்டில் 50% க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரத்தசோகை உள்ளது. வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி குறைவாக உள்ளது. இதை போக்க வேண்டிய பெரும் கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

ஜிடிபிஇல் 1.5 % மட்டுமே மருத்துவத்துறைக்கு செலவிடப்பட்டு வருகிறது. 5% செலவிடப்பட்டால் மட்டுமே குறைந்தபட்ச பொது சுகாதார தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. 1.5 % லிருந்து நேரடியாக 5% க்கு முன்னேறுவது ஒரு அரசுக்கு இயலாத காரியம். ஆனால் அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளிலாவது அந்த இலக்கை அடைவதற்கான குறிக்கோளை நிறுவ வேண்டும்" என்றும் அமலோற்பவநாதன் வலியுறுத்துகிறார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை :

2030இல் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சிறுகுழந்தைகள், இளையோரின் எண்ணிக்கை அதிகம் இருக்காது. முதியோரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். முதியோரை பொறுத்த வரை நீரிழிவு உயர் ரத்தம் மாதிரியான தொற்றா நோய்கள் தான் அதிகம் ஏற்படும். இவர்களை நோக்கிய தொலைநோக்கு திட்டம் தான் மக்களைத் தேடி மருத்துவம். 185.24 கோடி இதற்கான ஆய்வகங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மருந்துகளுக்கு 25 கோடி என மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை
தமிழக சுகாதாரத்துறை

எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு?

தாலுகா வரையுள்ள மருத்துவமனைகள் வரை தலைக்காயம் உள்ளிட்ட உயிர் காக்கும் தீவிர சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்த மட்டுமே 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய கட்டிடங்களை புதுப்பித்தல், புதிய கட்டிடங்கள் கட்டுதல் இதற்காக மட்டுமே 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையின் தவறுகள் - உணரவேண்டியவை:

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், “ 'வென்டிலேட்டர் வைத்த புதிய ஆம்புலன்சுகள் வாங்குதல், மருத்துவத்துறையில் ஒப்பந்த ஊழியர்கள் என்ற நிலையை இல்லாமல் ஆக்குவோம், அனைவரையும் நிரந்தப் பணியாளர்களாக மாற்றுவோம்' என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வரை ஒரு ஒப்பந்த பணியாளரைக் கூட நிரந்தரப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அம்மா மினி கிளினிக் மூடியது, ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்தது ஆகியவை மருத்துவத்துறையின் தவறுகள்“ என விமர்சிக்கிறார்

“மருத்துவத்துறை என்பது மக்களுக்கு ஆற்றக் கூடிய நிரந்தர அர்ப்பணிப்பான பணி. இதை தற்காலிக பணியாளர்களைக் கொண்டு வெகு நாட்களுக்கு கொண்டு செல்ல முடியாது. தகுதியான, திறமை வாய்ந்த, நல்ல பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு மருத்துவத்துறையை நடத்த வேண்டுமானால் அதற்கு நிரந்தரப் பணியளர்களைக் கொண்டிருத்தல் அவசியம். ஊதியம் குறைவு என்பதால் தற்காலிக பணியாளர்கள் வேலையை விட்டு சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் புது ஆட்களை பணியிலெடுத்து, பயிற்சியளிக்க வேண்டியிருக்கும். நிரந்தரப் பணியாளர்கள் தான் மருத்துவத்துறையின் முதுகெலும்பு என்பதை ஆள்வோர் உணர வேண்டும்” என்பது மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒருமித்து கூறும் கருத்து.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்

செய்யவேண்டியவை:

இதைத் தவிர, உறுப்பு மாற்று சிகிச்சைக்கென கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆதரித்ததால் தமிழ்நாட்டின் உறுப்பு தான திட்டம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டது. “உறுப்பு மாற்று சிகிச்சையை பொறுத்த வரை ஒன்றிய அரசின் பிடியிலிருந்து எப்படி வெளியே வருவது என மருத்துவத்துறை அமைச்சர் சிந்திக்க வேண்டும். இதற்கென ஒரு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்" என்பது உறுப்பு மாற்று சிகிச்சை வல்லுநர்களின் கருத்து.

தகவலறியும் உரிமை, கல்வி அடிப்படை உரிமை போல மருத்துவமும் நமக்கு அடிப்படை உரிமையாக வேண்டும். ராஜஸ்தான் இதில் முன்படி எடுத்து Right to health act கொண்டு வந்துவிட்டனர். மருத்துவத்துறை அமைச்சர் இதற்காக ஒரு கூட்டம் நடத்தி கருத்து கேட்டார். கருத்துக்களை தொகுத்து வெகு விரைவில் சட்ட வடிவம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

- சுகன்யா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com