தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்pt web

LIVE BLOG | பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் முதல் முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன் வரை

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது - பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. அடுத்த ஆண்டு தேர்தல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள திமுக அரசின் 5ஆவது மற்றும் கடைசி முழு பட்ஜெட்

தொடர் நேரலை

முதலமைச்சர் எக்ஸ் தள பதிவு

தமிழ்நாடு பட்ஜெய் 2025 - 26 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்!

விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன! ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட்.. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு பட்ஜெட்டை ஒட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அராசங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவிப்பார்.. தொடர்ந்து ஒரு குழு போடுவார்; குழு போட்டதும் அத்திட்டம் முடிந்துவிடும். அந்த குழு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அரசாங்கத்திற்கு தாக்கல் செய்த அறிக்கை என்ன? போன்ற தகவல்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை” என்றார்..

அவரது செய்தியாளர் சந்திப்பை முழுவதுமாகக் காண.,,,

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்நாடு.. என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் தங்கம் தென்னரசு

வருவாய் செலவினங்கள் 

நிதியமைச்சரின் உரையிலிருந்து, “2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 249,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், ஒன்றிய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. ஒன்றிய அரசு. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் 2016-17 ஆம் ஆண்டில் 3.41 சதவீதத்திலிருந்து, 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டில் 196 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இந்த 145 சதவீதம் குறைவினால் மாநில அரசிற்கு ஏற்படக்கூடிய 45,182 கோடி ரூபாய் இழப்பானது 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையில் ஏறத்தாழ 44.43 சதவீதத்திற்கு சமமாகும்.

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 299,009 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள் திருத்த மதிப்பீடுகளில் 293,906 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3,31,569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும்

செலவினங்களைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,48,289 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், வளர்ச்சிப் பணிகள் சாரா செலவினங்கள் குறைந்ததன் காரணமாக, திருத்த மதிப்பீடுகளில் 3,40,374 கோடி ரூபாயாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 9.65 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும்” எனத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாட்களை சமன் செய்து பண பலன் பெறலாம் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகை மீண்டும் வழங்கப்படும்

பத்து இலட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு.

அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு லேப்டாப்

அரசுக் கல்லூரியில் பயிலும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டுகளில் இலவச மடிக்கணினி கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்

இலங்கைத் தமிழர் நலன்

இலங்கைத் தமிழர் நலனில் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அவர்களது கண்ணியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில் 7469 வீடுகள் கட்டித்தருவதற்கான கட்டுமாணப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 3000 வீடுகள் ரூ.206 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

"மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரும் நிதியாண்டில் 14.6%-ஆக, அதாவது ரூ.2.4 லட்சம் கோடியாக வளர்ச்சி பெறும்; நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசு வரியின் பங்கு ரூ.52,491 கோடியாக இருக்குமென கணிப்பு ஒன்றிய அரசு வழங்காததால் மாநில அரசின் நிதி நிலைமை வெகுவாக பாதித்து வருகிறது”

மின்பேருந்துகள்

காற்று மாசுபாட்டை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்த சென்னைக்கு 950 மின்பேருந்துகள், கோவைக்கு 75 மின்பேருந்துகள், மதுரைக்கு 100 மின்பேருந்துகள் என 1125 மின்பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தப்படும்

பட்ஜெட்டில் மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்!

மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும்; 3 ஆண்டு பழமையான விசைத்தறிகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி குமரி, நாகை உள்ளிட்ட மீனவ பகுதிகளில் மீன்பிடி இறங்குதளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

மெட்ரோ திட்டங்கள்

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே ரூ.9,335 கோடியிலும், கோயம்பேடு - பட்டாபிராம் இடையே ரூ 9,744 கோடியிலும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே ரூ 8,779 கோடியிலும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும்

மருத்துவத்துறைக்கான திட்டங்கள்

நடமாடும் வாகனங்கள் மூலம் புற்றுநோய், இதயம் மருத்துவ பரிசோதனை செய்ய ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மருத்துவத் துறைக்கு ரூ.21,976 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • திசையன்விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்..

  • இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத்திட்டம்

  • ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு

  • பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை.. பழங்குடியினர் மரபுசார் அறிவைப் பாதுகாக்க ஈரோடு -பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி, கள்ளக் குறிச்சி - கல்வராயன் மலைப்பகுதி பயன்பெறும்.. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

  • ஓசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா,,., இதன்மூலம் 6500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்,

மீனவர்களுக்கான அறிவிப்புகள்

  • இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு நிவாரணத் தொகையை 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்.

  • இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரணத் தொகையை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • இலங்கை சிறையில் வாடும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 350 ரூபாய் தின உதவித்தொகை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த நிதியாண்டில் மீன் பிடிப்பு குறைவு மானியம் 1,79.147 மீனவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதமும்.

  • மீன்பிடிப்புக் குறைவு காலத்திற்கென சேமித்து வைப்பதை ஊக்குவிக்க 2,10,850 மீனவர் மற்றும் 2,03,290 மீனவ மகளிருக்குத் தலா 3,000 ரூபாய் வீதமும், மீன்பிடி தடைக் காலத்தில். 1,98,923 மீனவர்களுக்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு 1500 ரூபாயுடன் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பாக 6,500 ரூபாயும் சேர்த்து தலா 8,000 ரூபாய் வீதமும் என. மொத்தம் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • எரி எண்ணெய் (டீசல்) மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட நான்கு வழி சாலை அமைக்கப்படும்

மாற்றுத்திறனாளி நலத்துறை 1433 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் நியமன பதவி வழங்கும் வகையில் நடப்பு கூட்டத்தொடரில் சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும்

மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள் (Smart Vision Glasses), அறிவுசார் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணப் பெட்டகம் (TLM Kit) நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

பூவிதழ் எங்கும் பனித்துளிகள்

காற்றசைவில் வீழ்ந்திடாமல்.

மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள்

மட்சுவோ பாஷோ

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் அழகியல் ததும்பும் இக்கவிதை வரிகள், இயற்கையின் படைப்புகளுக்கு இடையே காணப்படும் ஆழமான பிணைப்பை மனிதர்களுக்கு உணர்த்திச் செல்கிறது.

இயற்கையினையும் உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம். இத்திட்டத்தின் கீழ், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஆதரவற்றோர். தனித்து வாழும் முதியோர். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள். மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

சதுரங்க விளையாட்டில் மாணவர்களை சாம்பியன்களாக உருவாக்கும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் உயர்கல்வியை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் உரிய முறையில் மாற்றியமைக்கப்படும்.,

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக, நீலகிரி - குன்னூர், திண்டுக்கல் - நத்தம், சென்னை - ஆலந்தூர், விழுப்புரம் - விக்கிரவாண்டி, செங்கல்பட்டு - செய்யூர், சிவகங்கை - மானமதுரை, திருவாரூர் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் - திருவிடைமருதூர், பெரம்பலூர், தூத்துக்குடி - ஒட்டப்பிடாரம் போன்ற இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்,.

5 நகர்புற சாலை பணிகளுக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு; சென்னையில் ரூ 486 கோடியிலும், கோவையில் ரூ.200 கோடியிலும், மதுரையில் ரூ.130 கோடியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும்

திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா 250 ஏக்கரில் உருவாக்கப்படும்; 5,000 வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும்

மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா ரூ.250 கோடி மதிப்பீட்டில் உருவாக்கம்; 20,000 வேலைவாய்ப்புகள் இதன்மூலம் உருவாக்கப்படும்

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்விநிறுவனங்களில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வரவும், உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் கொண்டு வருவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள் உருவாக்கப்படும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பொறியியல் பொருட்கள், வாகன பாகங்கள், வார்ப்புகள். பம்புகள், ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் போன்ற பல தொழில்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், 32 இலட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 25 இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும்.

பல்வேறு மாவட்டங்களில் புதிய நூலகங்கள்

தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு இலட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்.

தொழில்துறை

நிதியமைச்சரின் உரையிலிருந்து, ”மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் தோல் பொருட்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் வாகன உபபாகங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்தப் பெண் தொழிலாளர்களில் 41 சதவீதத்தினரை தன்னகத்தே கொண்ட சிறப்பையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

தேசிய ஏற்றுமதியில் 33 சதவீத பங்களிப்புடன் இந்தியாவின் மிகப்பெரும் மின்னணுப் பொருட்களுக்கான ஏற்றுமதிச் சூழல்கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2020-21 ஆம் ஆண்டில் 1.66 பில்லியன் டாலராக இருந்த மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி, 2023-24 ஆம் ஆண்டில் 9.56 பில்லியன் டாலராக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றிட பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது”

மகளிருக்கான திட்டங்கள்

  • 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம்

  • ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா! 20,000 வேலைவாய்ப்புகள்

  • ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030

  • திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்

  • ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்

மூன்றாம் பாலினத்தவர்கள் நல்வாழ்விற்கான பல திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களது சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து வாழ்வில் வெற்றி பெற உயர்கல்வி கற்பது இன்றியமையாதது ஆகும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

மூன்றால் பாலினத்தவருக்கு போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் பணியில் ஈடுபத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊர்க்காவல் படையினருக்கு இணையாக ஊதியம், பயிற்சி, சீருடை வழங்கப்படும்..

சமக்ர சிக்ஷா திட்டத்தில் 2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை; ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழிக் கொள்கையை விட்டுத் தர மாட்டோம். மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை .விடுவித்துள்ளது; மும்மொழிக் கொள்கையை ஏற்காமல் இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்

பள்ளிகளுக்கான திட்டங்கள்

  • ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!

  • ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!

  • நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் நீட்டிக்கப்பட்டு, மேலும் ரூ.600 கோடி ஒதுக்கீடு; இத்திட்டத்தால் தற்போது 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

  • ரூ.83 கோடியில் புதிய குழந்தை மையங்கள் அமைக்கப்படும்

    அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு; 2,000 அரசுப் பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு

  • 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு நடத்தப்படும்.

  • 1721 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்.

  • பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசே சொந்த நிதியை விடுவித்துள்ளது.

  • பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000

முதன்மை சுற்றுக் குழாய் திட்டம்

  • முதன்மைச் சுற்றுக்குழாய் எனும் திட்டம் மூலம் அனைத்து நீர் பகிர்மான நிலையங்களையும் இணைத்து சென்னையில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்க உறுதி செய்யப்படும். இத்திட்டம் ரூ.2423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.

  • தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கீழ் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை மேம்படுத்த ரூ.625 கோடி ரூபாய் புதிய திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்

நகர்புற வளர்ச்சி

  • நகர்புற வளர்ச்சித்துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 6100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்

  • தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் 864 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • 2000 ஏக்கர் பரப்பளவில் சென்னை அருகே புதிய நகரம் அமைக்கப்படும்

  • சாலைகள், பேருந்து வசதிகள் ,ரயில்வே ,மெட்ரோ வசதிகள் இதற்காக உருவாக்கப்படும். இதற்கான பணிகளை விரைவில் tidco நிறுவனம் தொடங்கும்.

  • சென்னையில் 7 இடங்களில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீரை உறிஞ்சும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்

  • மகளிர் உரிமை தொகை பயன் பெறாத புதிய பயனாளிகளுக்கு விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறைக்கு 26,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 10 ஆயிரம் சுய உதவி குழுக்கள் இந்த நிதி ஆண்டில் உருவாக்கப்படும். 37 ஆயிரம் கோடி வங்கி கடன் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும்

  • மகளிர் விடியல் பயணத்திற்கு 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு 2200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!

  • சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்

அருங்காட்சியகங்கள்

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் எழுதப்பட வேண்டும்.

  • ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம்

  • ரூ.21 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம்

  • ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்!

  • 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு

    சிவகங்கை - கீழடி

    சேலம்-தெலுங்கலூர்

    கோயம்புத்தூர் - வெள்ளலூர்

    கள்ளக்குறிச்சி ஆதிச்சனூர்

    கடலூர் - மணிக்கொல்லை

    தென்காசி-கரிவலம்வந்தநல்லூர்

    தூத்துக்குடி- பட்டணமருதூர்

    நாகப்பட்டினம்

  • வரும் நிதியாண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...

அனைத்து மொழிகளிலும் திருக்குறள்

  1. திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில், பன்னாட்டு பதிப்பாளர்கள் 28 வெவ்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திட முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 45 வெவ்வேறு உலக மொழிகளில் கூடுதலாக மொழி பெயர்க்கப்படும்போது ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 193 உலகநாடுகளில் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையினை திருக்குறள் பெறும். இத்திட்டத்திற்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  2. சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும்

  3. இரும்பின் உறுதியோடு, உரக்கச் சொல்வோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்

  4. ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்

பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம் என்றும் இந்தியாவில் 2ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் தெரிவித்தார்.

பட்ஜெட்டில் வந்த அறிவிப்புகள்...

  • தமிழ் புத்தகக் கண்காட்சியை துபாய், சிங்கப்பூர், மலேசியாவில் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வேளச்சேரி - குருநாத் கல்லூரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

  • 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு நதி தூய்மை செய்யும் பணி தொடங்கி உள்ளது. முதலில் சைதாப்பேட்டை முதல் திருவிக பாலம் வரை பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்

  • சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும்

  • கலைஞர் கனவு இல்லம் 3500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்படும்.

  • கொருக்குப்பேட்டையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்

  • 6100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்

  • நகர்புற வளர்ச்சித்துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு நடைபோடுகிறது - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதுபான ஊழல் புகாரைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு

- திருவள்ளுவர்..

திருக்குறளை வாசித்து கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு...

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது - பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அடுத்த ஆண்டு தேர்தல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள திமுக அரசின் 5ஆவது மற்றும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்... உடனடித் தகவல்களுக்கு புதியதலைமுறையுடன் இணைந்திருங்கள்....

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com