'கேப்டனின் ஆன்மா மன்னிக்காது; அவருக்கு அவமானத்தை நிகழ்த்தியது திமுக' - பாஜக விமர்சனம்!
திமுக-தேமுதிக கூட்டணி குறித்து தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. விஜயகாந்த் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த திமுகவுடன் தேமுதிக இணைந்ததை கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என பாஜக தெரிவித்துள்ளது. இதனால், தேமுதிக-திமுக கூட்டணி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தொடங்கி விருதுநகர் வரை தமிழகத்தில் பரவலான வாக்கு வங்கியைத் தன்வசம் கொண்டுள்ள தேமுதிக, வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.
கட்சிக்கான அங்கீகாரத்தைப் பாதுகாத்திட வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 விழுக்காடு வாக்குகளையும், 8 தொகுதிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்துவந்த தேமுதிக, 20 தொகுதிகள் வேண்டும் அதிமுக-திமுக இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால் இருபெரும் திராவிடக் கட்சிகளும் 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என்ற அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்திவந்தன.
கடைசிநேரம் வரை தேமுதிக, அதிமுகவின் பக்கமே செல்லும் என சொல்லப்பட்டது. சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக- தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே தகவல் பரவியது.
ஆனால் கடைசி நேர டிவிஸ்ட்டாக திமுக கூட்டணியில் முதல்முறையாக இணைந்துள்ளது தேமுதிக. முதல்வர் ஸ்டாலினை நேராக சென்று சந்தித்த தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதிசெய்தார்.
இந்நிலையில் விஜயகாந்திற்கும், தேமுதிகவிற்கும் அதிகமாக கொடுமைகளையும், அவமானங்களை நிகழ்த்திய திமுக உடன் கூட்டணி வைத்ததை கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது..
திமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தமிழக பாஜக, ”தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என பதிவிட்டுள்ளது.
ஒருபக்கம் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்ததற்கு ஆதரவு இருந்துவரும் வேளையில், மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

