நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம்; ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவைகோப்புப்படம்

இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (12/02/2024) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஆளுநர் சில வார்த்தைகளை நீக்கியும் சில வார்த்தைகளை சேர்த்தும் பேசியதால் சர்ச்சை எழுந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது.

காலை 9:55 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மரபுப்படி சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்க உள்ளார். பிறகு காலை 10 மணிக்கு சட்டமன்றம் தொடங்கியதும் ஆளுநர் தன்னுடைய உரையை வாசிக்க உள்ளார்.

வழக்கம் போல அரசியலமைப்பு விதிகளின் படி ஆளுநர் என்ன பேச வேண்டும் என்பதை தமிழக அரசு உரையாக தயாரித்து ஏற்கெனவே கொடுத்து அவரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டது. மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ளதால், தமிழக அரசின் சாதனைகள் குறித்ததான விவரங்களுடன் முக்கிய அறிவுப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்த பின், சபாநாயகர் அதன் தமிழாக்கத்தை வாசிப்பார். அத்துடன் இந்த கூட்டத்தொடர் முடிவடையும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர்

கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது அவர் ‘தமிழ்நாடு, சமூக நீதி, அண்ணா, பெரியார், கலைஞர்’ போன்ற சில வார்த்தைகளையும், சில பத்திகளையும் படிக்காமல் விட்டுவிட்டார். அதேபோல அவராக சில வார்த்தைகளை சேர்த்தும் படித்திருந்தார். அது பேரவையில் பெரும் சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் தனி தீர்மானம் கொண்டு வந்து அவற்றை நீக்கி விட்டு அரசு கொடுத்த உரையை மட்டும் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று ஆளுநர் தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள அந்த உரையை அப்படியே படிக்கப் போகிறாரா அல்லது கடந்த ஆண்டு போல சில வார்த்தைகளை தவிர்ப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com