50 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியின்போது, "5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. தொடர்ந்து, நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்தசூழலில் தான், தலைமை செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி வளர்ச்சி துறை அமைச்சர் என். மரிய வில்சன் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகை முழுமையாக (100%) தள்ளுபடி செய்யப்படும் எனவும் சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க தள்ளுபடி செய்யப்படும் தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக, ரூ.1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி). இவர்களுக்குத் தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தனது தேர்தல் வாக்குறுதியின்போது, "5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் குறு விவசாயிகளுக்குக் கூட ரூ.50,000 வரை மட்டுமே முழுத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட கடன் தொகைக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை. சிறு விவசாயிகளுக்கு 50% மட்டுமே தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் தான், வாக்குறுதி அளித்தபடி கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், இந்த ரூ.50,000 வரம்பு என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்றும் விமர்சங்கள் எழுந்துள்ளன.

