‘பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும்’ மத்திய அரசுக்கு தமிழக வேளாண் ஆணையர் கடிதம்
தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு தற்போதுதான் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க கோரி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் கடிதம்
எழுதியுள்ளார்.
அதில் “அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பயிர்க்காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடையவுள்ளது. பருவமழை தாமதம், காவிரியில் போதிய நீர் திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பயிர் நடவு தாமதமாகியுள்ளது.
பண்டிகை கால தொடர் விடுமுறையால் விவசாயிகளால் பயிர்க்
காப்பீடு செய்ய முடியவில்லை. இதனால் பயிர்க்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு வேளாண் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.