”70% ஒப்பந்தங்கள் எங்களுடையது” - அரசின் நடவடிக்கையை விமர்சித்த டி.ஆர்.பி.ராஜா!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும், இதனால் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு, 4,476 கோடி ரூபாய் முதலீட்டில் 5,074 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் 2,676 கோடி ரூபாய் முதலீத்தில் 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளையம் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். எனினும் இந்த மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், முதலீட்டாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தமிழகத்தில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானதாக கூறப்படும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதில் சுமார் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள் அல்லது முந்தைய திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் என அவர் தெரிவித்துள்ளார்.

