பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சர்ச்சை கருத்து பதிவு: எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை! ஆனால்..?

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதி்த்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
sv sekar
sv sekarPT

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்களும் நடைபெற்றன.

இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. மேலும், விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும், சிறப்பு நீதிமன்றம் உரிய முறையில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் நடிகர் எஸ்வி சேகருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஒரு மாத சிறைத் தண்டனையுடன் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

தீர்ப்பு விதிக்கப்பட்ட பின் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனால் அந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் எஸ்.வி.சேகர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி உயர்நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக பிறப்பித்த உத்தரவை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளார்.

மேல்முறையீடு செய்வதற்குண்டான காலக்கட்டத்திற்குள் எஸ்.வி. சேகர் மேல்முறையீடு செய்யாவிட்டால் அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com