\
Supreme Court ruled converts from Hinduism to Islam cannot claim reservation benefits
Supreme court ANI

’மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை..’ - உச்ச நீதிமன்றம் அதிரடி.. பின்னணி என்ன?

மதம் மாறுவது மட்டுமே ஒருவரை தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக மாற்றிவிடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினால் , தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (MBC), மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் (SC) இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும், அவர்கள் முன்பு இருந்த சாதியின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெறலாம் என தமிழக அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

Tamil Nadu
Tamil NaduANI

இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2026, ஜூன் 25-ஆம் தேதி அந்த அரசாணையை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மதம் மாறுவது மட்டுமே ஒருவரை தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக மாற்றிவிடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அன்சார், டெக்கானி முஸ்லிம்கள், துபேகுலா, லப்பை, மாப்பிள்ளை, ஷேக் மற்றும் சையது உள்ளிட்ட ஏழு சமூகங்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

வழக்கின் பின்னணி

பரமசிவம் என்பவர் 2015-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறி சமீர் அகமது என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். இதையடுத்து, முஸ்லிம் லப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பி சமூகச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், வருவாய்த் துறை அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையும் முக்கிய விவகாரமாக மாறியது.

Chennai High court
Chennai High court ANI

ஒருவர் தனது பழைய சாதியின் அடிப்படையில் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு, குறிப்பிட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராகத் தானாகவே கருத முடியாது என்று கூறி, அந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தற்போது உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளதால், மதம் மாறியதன் அடிப்படையில் மட்டும் முஸ்லிம் இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்பது தெளிவாகியுள்ளது.

Supreme Court ruled converts from Hinduism to Islam cannot claim reservation benefits
தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com