பச்சைக் கொடி காட்டிய உச்சநீதிமன்றம்... மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி? கடைசியில் ட்விஸ்ட்
செந்தில் பாலாஜி நீதிமன்றத்தின் அனுமதியுடன் மீண்டும் அமைச்சராகலாம் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், நீதிமன்றங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடந்து வரும் வழக்குகள் மற்றும் விசாரணைகள் குறித்துக் காணலாம்.
2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி. அதே ஆண்டில் உச்சநீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரியது. 2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால், முதலில் இலாகாவையும் பின்னர் அமைச்சர் பதவியையும் இழந்தார். 450 நாட்களுக்கு மேல் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த உடனே செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கிடைத்தது. அவர் ஏற்கனவே பார்த்து வந்த துறையான மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு - ஆயத்தீர்வை துறைகள் மீண்டும் ஒதுக்கப்பட்டது. பின்னர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்பட்ட நிலையில், விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் பதவியா.. ஜாமீனா என்று செந்தில் பாலாஜிக்கு கெடு விதித்தது. உச்சநீதிமன்றம் சொன்ன அடுத்த நாளே அதாவது கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி. வழக்கும் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்; அவர் அமைச்சராக பொறுப்பேற்கக்க்கூடாது என நாங்கள் சொல்லவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன், செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால், உரிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெறலாம் என்றதோடு அனைத்து தரப்பும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றம் பச்சக் கொடி காட்டியுள்ள நிலையில் செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், கரூர் துயர சம்பவத்தின் தாக்கம் இருந்து வரும் நிலையில் இந்த நேரத்தில் செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு யோசிக்கலாம் அல்லது அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சர் பொறுப்பை உடனடியாக வழங்கவும் செய்யலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், விசாரணையின் போது, செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை டெல்லிக்கு ஏன் மாற்றக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிபதியின் கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு, வழக்கின் விசாரணையை டெல்லிக்கு மாற்றினால் வழக்கின் சாட்சிகள் வந்து செல்வதற்கும் இந்த விசாரணை விரைவாக முடிப்பதற்கும் சிக்கல் ஏற்படும் என்றதோடு, வழக்கின் விசாரணை மாற்றப்பட்டால் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் போகும் என வாதம் முன்வைத்தனர். அப்போது நீதிபதிகள், இவ்விவகாரங்களில் நாள்தோறும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுதுகிறது. எனவே வழக்கை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்து நாள்தோறும் விசாரணை மேற்கொண்டால் சரியாக இருக்கும் என உத்தரவிடலாமா? என கேள்வி எழுப்பினர்.
ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவ்வாறு வழக்கை வேறு மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கு மாற்றினால் இந்த வழக்கில் பல்வேறு சாயங்கள் பூசப்படும். எனவே வழக்கை தமிழகத்தில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், மனுதாரர்கள் ஒய்.பாலாஜி மற்றும் வித்யா குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாட்சிகள் டெல்லி வருவதற்கு சிரமம் ஏற்படும் என்றால் வழக்கை டெல்லிக்கு மாற்றாமல் தமிழகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய பெங்களூருக்கு மாற்றலாமே என வாதம் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பான விவகாரம் குறித்து அனைத்து தரப்பினுடைய வாதத்தை கேட்டு முடிவு செய்யலாம் என தெரிவித்ததோடு,இந்த மனுக்கள் தொடர்பாக ஒய்.பாலாஜி, வித்யா குமார், அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து மனுதாரர்களும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.