டாஸ்மாக் வழக்கு |ED விசாரணைக்கு தடை; கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்!
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேளாளர் என பலரை அழைத்து விசாரணை நடத்தி, பலருக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில்தான், அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. ஆனால், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .
இதனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இவ்வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையில் இறுதியில் டாஸ்மார்க் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது .
மேலும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், "அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது. ஒரு அரசு நிறுவனத்தின் மீது நேரடியாக எப்படி குற்றம் சுமத்த முடியும்? நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக வரம்புமீறி நீங்கள்(அமலாக்கத் துறை) செயல்படுகிறீர்கள். முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்?. டாஸ்மாக், அரசு சார்ந்த நிறுவனமாகும். தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா? " என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தநிலையில், பாஜக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம் என்றும், அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு, இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கவே அமலாக்கத் துறை சோதனை; அமலாக்கத் துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.