"இலவசங்களுக்கு பணம் இருக்கிறது.. ஊதியம் கொடுக்க இல்லையா?" தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
தமிழ்நாடு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள்! அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்!
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள் என நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கூறியதோடு, ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள்! அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்! என தெரிவித்தனர்.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ‘மத்திய அரசிடம் இருந்து உரிய பணம் கிடைக்கவில்லை. அதனால்தான் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது’ என தெரிவித்தனர். ஆனால், தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது" என தெரிவித்தனர்.
இலவசங்கள் கொடுக்க மட்டும் பணம் இருக்கிறதா?
மேலும் இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஆனால் பணி செய்பவர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என கேள்வி எழுப்பியதோடு செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசை காரணம் காட்டுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? என்பதை கூறுங்கள். ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா என தெரிவித்ததோடு வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு !
பின்னர் வழக்கில் சில கருத்துகளை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு அனைத்திலும் வளர்ந்த மாநிலம் , பொருளாதார ரீதியில் வளர்ந்த மாநிலம் என கூறுகிறீர்கள். ஆனால் சேவை செய்யும் செவிலியர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். இதை நாங்கள் ஏற்க முடியாது என கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்காததினால்தான் தங்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என தமிழ்நாடு அரசு தரப்பு கூறியதை தொடர்ந்து மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் அதிகாரம் படிப்பு சங்கம் பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.