தயாநிதி மாறன் vs கலாநிதி மாறன்
தயாநிதி மாறன் vs கலாநிதி மாறன்முகநூல்

தயாநிதி மாறன் vs கலாநிதி மாறன்..சொத்துப் பிரச்சினை முடிவை எட்டியதா?

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும் மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் இடையிலான சொத்துப் பிரச்சினை முடிவை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
Published on

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மேற்கொண்ட சமரச முயற்சியின் அடிப்படையில் சகோதரர்கள் இருவரும் இணக்கமான முடிவு நோக்கி நகர்ந்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞர் மு.கருணாநிதியின் சகோதரி மகனும் ஆகிய முரசொலி மாறனுடைய மகன்களான கலாநிதி மற்றும் தயாநிதி இடையே சொத்து பகிர்வு தொடர்பாக முரண்பாடுகள் இருந்துவந்தன.

இந்நிலையில், தன்னுடைய சகோதரரான கலாநிதிக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பிய தயாநிதி அடுக்கடுக்கான முறைகேடு குற்றச்சாட்டுகளை கலாநிதி மீது வைத்திருந்தார். இதற்கு பதிலாக சிறு அறிவிப்பை வெளியிட்ட கலாநிதி “இது குடும்ப பிரச்சினை” என்று சொல்லி முடித்துவிட்டார். தென்னகத்தின் மிகப் பெரிய ஊடக குழுமமான சன் குழுமத்தை முன்வைத்து உருவான இந்தச் சகோதர சண்டை கார்ப்பரேட் உலகில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டை ஆளும் திமுகவிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆளும் திமுகவுக்கு எதிரான அஸ்திரங்களில் ஒன்றாக எதிர்க்கட்சிகளால் இது பயன்படுத்தப்படலாம்; தவிர சன் குழுமத்துக்கு எதிரான வட இந்திய நிறுவனங்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அச்சம் திமுகவினர் மத்தியில் உருவானது.

தயாநிதி மாறன் vs கலாநிதி மாறன்
’கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டறாங்க..’ விமர்சனத்தை சந்தித்த இபிஎஸ் பேச்சு!

இத்தகு சூழலில்தான், தன்னுடைய குடும்பம் சார்ந்த இந்த பிரச்சினையை நேரடி தலையீட்டின் கீழ் தீர்த்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘மணி கன்ட்ரோல்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் மாறன் குடும்பத்தினரை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். சகோதரர்கள் இணக்கமாகச் செல்லும்படியும் அதுவே நிறுவனத்துக்கும், குடும்பத்துக்கும் நல்லது என்றும் கூறியுள்ளார்.

தயாநிதி தரப்பு கவலைகளை கலாநிதியிடம் பகிர்ந்துகொண்ட அவர், கலாநிதி தரப்பு நியாயங்களையும் தயாநிதியிடம் எடுத்துச் சொல்லியதாக தெரிகிறது. மேலும், மூத்த பத்திரிகையாளரும் முதல்வரின் நண்பருமாகிய என்.ராம் மூலமாகவும் மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில், தயாநிதி மாறன், சன் குழுமத்தின் ‘தினகரன்’அல்லது ‘சுமங்கலி’ நிறுவனத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரியிருக்கிறார். ஆனால், கலாநிதி மாறன் இதனை ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை தடைபட்டதாகவும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், கூடுதல் பங்குகள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் கருத்துகளை புதிய தலைமுறை பெற முயன்றாலும், அவர்களுடன் பேச இயலவில்லை. குடும்பத்தின் மூத்தவர் என்ற வகையில் முதல்வர் மேற்கொண்ட முயற்சியை மாறன் சகோதரர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டதாக வெளியான தகவல் திமுகவினருக்கு ஆசுவாசத்தை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com