’கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டறாங்க..’ விமர்சனத்தை சந்தித்த இபிஎஸ் பேச்சு!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடாக தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இப்பயணத்தின் முதல் கட்டமாக, ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் தொடங்கியுள்ளது. இந்த பயணம் திமுக ஆட்சியின் குறைபாடுகளை எடுத்துரைத்து, அமைதி, வளர்ச்சி, மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதாக அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இன்று கோவையில் நடைபெற்ற "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பேசிய கருத்து விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.
கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டறாங்க..
கோவிலை பார்த்தாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துது, கோவில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது எப்படி நியாயம் என எடப்பாடி பழனிசாமி பேசியது விமர்சனத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், “கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அதிமுக ஆட்சியில் அப்படித்தானே செய்தோம், இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள்” என்று விமர்சித்து பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து, ’கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது, கல்லூரியை விட கோவில் முக்கியமா’ போன்ற பல்வேறு விமர்சனத்தை பெற்றுவருகிறது.