கடலூர்: சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட பெண்.. மருத்துவமனையில் தீக்குளிக்க முயன்ற உறவினர்கள்!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. பிரசவத்திற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சையின்போது கர்ப்பப்பையையும் குடலையும் ஒன்றாகவைத்து மருத்துவர்கள் தைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீராத வயிற்று வலி இருந்துவந்துள்ளது. மேலும், அவருக்கு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் புதுவையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு, ’கடலூர் அரசு மருத்துவமனையில் செய்த சிகிச்சையால்தான் இந்தப் பாதிப்பு’ எனக் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்புதிய தலைமுறை

இதனால் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் மருத்துவத் துறையிடமும் அவர்கள் மாறிமாறிப் பல புகார்கள் அளித்துள்ளனர். ஆனால் எதற்கும் பதில் இல்லை. இந்த நிலையில், பத்மாவதியின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, இன்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அங்கு, ’எங்கள் அனைவரின் உடல் உறுப்புகளயும் தானமாக எடுத்துக்கொள்ளுங்கள்; நாங்கள் உயிரோடு இருக்க விரும்பவில்லை. இல்லை என்றால் நாங்கள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்போம்’ எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து மருத்துவமனை இணை இயக்குநருடன் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com