கூடங்குளம் போராட்டம் டூ வேல்முருகன் கட்சியில் இணைப்பு.. சுப.உதயகுமாரின் அரசியல் பயணம்!
”பச்சைத் தமிழகம் கட்சி தோழர் தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது’’ என பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரும் சூழலியல் செயற்பாட்டாளருமான சுப.உதயகுமாரன் அறிவித்திருக்கிறார்..,கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் தமிழக அரசியல் களத்தில் அறிமுகமான சுப.உதயகுமாரன் தற்போது தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்..,அவரின் பயணம் குறித்துப் பார்ப்போம்.., கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர் சு.ப.உதயகுமார்.
மதுரை மற்றும் கேரளா பல்கலைக்கழகங்களில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1989-ஆம் ஆண்டு முதல் 2000 வரை அமெரிக்காவிலுள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகங்களத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். சமூக-அரசியல்-பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பல நூல்களும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் உதயகுமார்..,அதோடு, சுமார் 25 நாடுகளுக்குச் சென்று சர்வதேச மாநாடுகளில் பேசியிருக்கிறார். உலகெங்குமுள்ள பல பல்கலைக்கழகங்களில் கௌரவ ஆசிரியாக பணியாற்றியிருக்கிறார்..,எத்தியோப்பியா நாட்டில் ஆங்கில ஆசிரியராக ஆறாண்டுகள் பணியாற்றினார்.
இது ஒருபுறமிருக்க, 1988ம் ஆண்டு முதலே திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதன் உச்சகட்டமாக மின் உற்பத்திக்கு முதற்கட்டமான எரிபொருள் நிரப்பும் பணி அணு உலையில் துவங்கவிருக்கிறது என இந்திய அரசு அறிவித்ததன் விளைவாக செப்டம்பர் 10, 2012ல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அணு உலையை முற்றுகையிட்டனர். அப்போது, அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சு.ப.உதயகுமார் அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டில் அதற்குப்பிறகு நடந்த பல மக்கள் திரள் போராட்டங்களுக்கு, முன்மாதிரியாக இந்தப் போராட்டம் இருந்தது..,
இது ஒருபுறமிருக்க, 2014-ம் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுப.உதயக்குமார் சொற்ப வாக்குகள் பெற்று தோல்வியைடைந்தார்..பின்னர், தம்ழ்நாட்டு அரசியல் கலாசாரத்துக்கு ஏற்ப ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் இல்லாததால் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார்..,தொடர்ந்து 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பச்சைத் தமிழகம் எனும் சூழலியல் கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலை அணுகும் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்..,
தொடர்ந்து, 2015 டிசம்பரில் அரசியல் கட்சியாக அதை மாற்றினார்..,அதோடு, 2016 சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்..,இந்தநிலையில் தற்போது, தன்னுடைய கட்சியை அமைப்பாக மாற்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சியோடு இணைத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்..,
அதில்,``கடந்த எட்டு ஆண்டுகளாக ஓர் அரசியல் கட்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனாலும் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சிறு கட்சியாக தனித்து இயங்கி எந்தவிதமான பெரும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்பதை உணர்கிறோம். அதேபோல, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஆளுமைகள் மற்றவர்களோடு கைகோர்த்து இயங்காமல் தனித்தே நின்று தவறு செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இவ்விரண்டு குறைகளையும் களைந்திடும் பொருட்டு, ஒத்தக் கருத்துடைய இயக்கங்களோடு கைகோர்த்துக் களமாடுவது என்று பச்சைத் தமிழகம் கட்சித் தோழர்கள் முடிவு செய்திருக்கிறோம். நம்முடைய தமிழ் மொழியை, தமிழ் மண்ணை, தமிழ் மக்களைக் காத்துக்கொள்ளும் பெரும் பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலைப் பரவலாக்கி, உண்மை, நேர்மை, உறுதி, ஒழுக்கம் போன்ற விழுமியங்களோடு அதனை முன்னெடுத்து இயங்குவது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.
அந்தவகையில்,பச்சைத் தமிழகம் கட்சி தோழர் தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது’’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது