தைப்பூசம் நாளில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படுமா? வெளியான குட் நியூஸ்!
தைப்பூசம் நாளான இன்று (பிப்ரவரி 11) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில், சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, பலரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதில்லை.
ஆனால், இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று ஆவணப்பதிவுகளை மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுக்கு, விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.