திருப்பத்தூர்|பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!
செய்தியாளர் விக்டர் சுரேஷ்
மாணவனின் உடலில் காயங்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டும் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த முகிலன், வகுப்பு வரவில்லை என பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் துறையை நாடினர். இந்த சூழலில்தான் பள்ளி வளாகத்தில் இருந்த கிணற்றில் முகிலன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்ட உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவர்கள், உடம்பில் ரத்த காயங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
பள்ளி நிர்வாகத்திற்கு காவல் துறை துணைபோவதாகவும் தெரிவித்தனர்.தொடர்ந்து மாணவனின் மரணத்திற்கு நீதிகேட்டு, அதிமுக, தவெக, இந்து முன்னணி அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மாணவனின் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே இது கொலையா தற்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள முடியும் என காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.