”தவெக தொண்டர்களுக்கு S.I.R. படிவங்கள் கொடுப்பதில்லை” - தவெக நிர்வாகி அருண்ராஜ் !
தமிழக வெற்றிக் கழகம் எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோவையில் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எஸ்.ஐ.ஆர் அவசியம் என்றாலும், தேர்தல் நேரத்தில் அவசரமாக செய்ய வேண்டியதில்லை என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்த்து, இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு பின்பு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மாநில அளவில் எஸ்-ஐ-ஆர் க்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர் என்பது கண்டிப்பாக அவசியம். ஆனால், தேர்தல் நேரத்தில் ஏன் அவசரமாக செய்ய வேண்டும். தமிழகத்தில் 6.4 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். பி.எல்.ஓ-க்கள் எப்படி அரசுப்பணி வேலையை பார்த்துவிட்டு BLO வேலையையும் பார்க்க முடியும். தொடர்ந்து, பிஎல்ஓ பின்னால் திமுகவினர் செல்கின்றனர், தவெக கட்சிக்காரர்கள் சென்றால் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தவெக ஆதரவாளர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர் படிவங்கள் கொடுக்கப்படவில்லை, இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். பீகாரில் எஸ்.ஐ.ஆர் அறிவித்த பொழுது தமிழக வெற்றி கழகம்தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. நியாயமான சந்தேகங்களை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை. இந்த வாக்காளர் பட்டியலை வைத்துத்தான் கடந்த ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் சரியாக நடக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு வாக்காளர் கூட நீக்கப்படக் கூடாது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல் மாநாட்டில் சொன்ன நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும், பாஜகவை தவிர்த்து கூட்டணிக்கு மற்ற கட்சிகளை வந்தால் ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

