தவெகவுக்கு ஆதரவு.. பதவி விலகல்.. 4 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு மீது பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தவெக அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்து இருந்த நிலையில், தமிழக வெற்றி கழக அரசு வெற்றி பெற்றது. அதில், எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதையடுத்து, அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்எல்ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். மேலும், 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இதற்குப் போட்டியாக, எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 22 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் வேலுமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வேலுமணி தரப்பைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியிலிருந்து விலகி தவெகவில் போய் இணைந்தனர். இன்னொரு புறம், பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேலுமணி தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒன்றிணைந்தது. இதையடுத்து, இருதரப்பும் இணைந்துபோய் தாங்கள் கொடுத்த கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். மேலும், வேலுமணி தரப்பினர் அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர்.
இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகரும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தவெகவிற்கு ஆதரவு அளித்த 21 அ.தி.மு.க. எம்எல்ஏக்களையும் மன்னிப்பதாக எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தததை தொடர்ந்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை என சபாநாயகர் அறிவித்தார். அதேநேரத்தில், கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிலையில், அந்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்தும், 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

