“சட்டமன்றத் தேர்தல் வந்தால் மக்கள் அதிமுகவுக்குதான் ஓட்டு போடுவார்கள்” - எஸ்.பி.வேலுமணி பேச்சு
செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர்....
அதிமுக-வில் இருப்பதே நமக்கு பெருமை:
“சிறிய வயதில் இருந்து இன்று வரை கட்சியில் தொடர்கிறோம். கழகம் ஆரம்பிக்கும் போது செயல்பட்ட அதே வேகத்தில், மூத்த நிர்வாகிகள் இன்றும் செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிமுக-வில் இருப்பதே நமக்கு பெருமை. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிக திட்டங்கள் கொடுத்தது அதிமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது எடப்பாடியார். வாரி வாரிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவர் இருந்திருந்திருந்தால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்திருப்பார்கள்.
“நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்கு எதிரி திமுகதான்”
யாரை வேட்பாளராக அறிவித்தாலும் எடப்பாடியார் போட்டியிடுவதாக எண்ணி வெற்றி பெற செய்ய வேண்டும். கேட்டது எல்லாம் கொடுத்தவர் எடப்பாடியார். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்கு எதிரி திமுகதான். 2026 இல் எடப்பாடியாரே நம் முதலமைச்சர். அதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும். நாம் நமது பூத்தில் அதிக வாக்கு வாங்க வேண்டும். உங்கள் பகுதியில் நீங்கள் அதிக ஓட்டு வாங்கினால் நாம் முன்னணி பெறலாம்.
“1991ல் அம்மா 200 சீட் வென்றார்கள்”
எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். சட்டமன்றத் தேர்தல் வந்தால் மக்கள் அதிமுகவுக்குதான் ஓட்டு போடுவார்கள். அதிமுகவை பற்றி தான் எல்லோரும் பேசுவார்கள். இது சாதாரண இயக்கம் அல்ல. 1991ல் அம்மா 200 சீட் வென்றார்கள். அதற்குப் பிறகு திமுக மைனாரிட்டி ஆட்சிதான். 2011ல் அம்மா ஆட்சிக்கு வந்தார்கள். 2016ல் அம்மா தலைமையில் நாம் வென்றோம். 2022ல் எடப்பாடியார் தலைமையில் தேர்தலை சந்தித்தோம். அன்று நிலை வேறு. ஆனால், இன்று திமுகவுக்கு ஓட்டுப்போட யாரும் தயாராக இல்லை.
“பூத் கமிட்டியில் சரியாக வேலை செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்”
திமுக ஆட்சியில் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு என பல நடந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது . இந்த 3 தொகுதிகளில் வெல்ல வேண்டும். எல்லா பூத்களிலும் பொறுப்பாளர்கள் உள்ளனர். கண்டிப்பாக ஒற்றுமையாக இருந்து மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வெற்றியை தேடித்தர வேண்டும். பூத் கமிட்டியில் சரியாக வேலை செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களை வைத்து 30 பேர் சேருங்கள். திட்டமிட்டு செய்தால் நமக்குதான் வெற்றி.
மக்களை சந்திக்க கூடிய உணர்வு, தைரியம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்கும் உரிமை அதிமுகவுக்கு மட்டும் இருக்கிறது. யாரும் வருத்தப்பட வேண்டாம். சிறப்பாக பணியாற்ற கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.