சென்னை| வேலைக்கு போகச் சொல்லி தொந்தரவு செய்த தாய்.. மகன் செய்த வெறிச்செயல்!
சென்னையில் வேலைக்கு செல்லும்படி தாயால் வற்புறுத்தப்பட்ட மகன், ஆத்திரத்தில் தாயை குத்தி கொலை செய்தார். பின்னர், எதுவும் நடக்காதது போல் படுக்கையில் உறங்கிய மகனை, சந்தேகத்தின் பேரில் நண்பர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தாயின் சடலத்தை மீட்டு, மகனை கைது செய்தனர். விசாரணையில் மகன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சென்னை நொளம்பூரில் இரண்டாவது பிளாக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் ஆக்ஸலியா மற்றும் அவரது மகன் நிக்கில் வசித்து வந்துள்ளனர். கணவரை பிரிந்த நிலையில் 15 வருடமாக மகனுடன் ஆக்ஸலியா வசித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரியை முடித்து 2024ஆம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிக்கில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் சென்னை திரும்பிய நிக்கில் எந்த வேலைக்கும் செல்லாமல் பல்வேறு நிறுவனங்களில் கடன் பெற்று தன்னுடைய செலவை பார்த்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை கேட்டு வருவதால் கடனை அடைப்பதற்காக வேலைக்கு செல்லும்படி கடந்த ஒரு வருடமாக தாய் ஆக்ஸிலியா மகனை வற்புறுத்தி வந்துள்ளார்.
தாயை கொலைசெய்த மகன்..
இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு செல்லும்படி கூறியதால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மகன் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தாயைக் குத்தி சாய்த்து உள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் வீட்டின் படுக்கை அறையில் படுத்து உறங்கி உள்ளார். நிக்கிலை அவருடைய நண்பர் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் அவரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியும் கதவையும் திறக்காமல் இருந்துள்ளார். இதனால் பயந்த அவரது நண்பர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது ரத்த வெள்ளத்தில் ஆக்சிலியா உயிரிழந்து சடலமாகவும் மகன் நிக்கல் படுக்கையறையில் தூங்கிக் கொண்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாய் ஆக்சிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட மகனிடம் போலீசார் விசாரணை செய்ததில் வேலைக்கு செல்லும்படி தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அம்மாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் வெளியில் இருப்பதைவிட ஜெயிலில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் அம்மாவை கொலை செய்தால் நடக்கும் எனவும் போலீசாரிடம் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் நிகிலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

