சென்னைக்கு வருகிறது ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம்.. ஒரே நேரத்தில் 2000 ஆயிரம் கார்களை நிறுத்தலாமாம்..!
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. அதற்கு சென்னையும் விதிவிலக்கு அல்ல. போக்குவரத்து நெரிசலுக்கு காரணத்தை கண்டறிந்து அதனை ஆக்கப்பூர்வமாக சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. அது என்ன? என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
சென்னையில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை என்பது ஒரு பிரச்னை என்றால்... சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது மற்றொரு பிரச்னை... இந்த இரண்டிற்கும் ஒரே திட்டம் மூலம் தீர்வுக்காண முயல்கிறது சென்னை மாநகராட்சி. அது தான் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம். ஏற்கெனவே மெரினா கடற்கரை, தி.நகர் போன்ற பகுதிகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதனை மேம்படுத்தி, சென்னை மாநகராட்சியும், போக்குவரத்து ஆணையமும் இணைந்து ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கொண்டுவர உள்ளன. முதற்கட்டமாக அண்ணா நகரில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. அங்கு 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2ஆவது, 3ஆவது, 6ஆவது அவென்யூ சாலைகள் தயாராகி வருகின்றன. இந்த சாலைகளில் 2ஆயிரம் 4 சக்கர வாகனங்கள், 5ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்காக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் ஆயிரத்திற்கும் அதிகமான கேமராக்களும் பொருத்தப்படுகின்றன. அண்ணாநகரில் இந்த திட்டம் எந்தளவிற்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கைக்கொடுக்கிறது என்பதை பொறுத்து, மாநகரின் மற்ற பகுதிகளுக்கு இது விரிவுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் பார்க்கிங் என்றால் என்ன?
ஸ்மார்ட் பார்க்கிங் என்பது பார்க்கிங் இடங்களைக் கண்டறிந்து, நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப தீர்வாகும். இது சென்சார்கள், கேமராக்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பார்க்கிங் இடங்களைப் பற்றிய நிகழ்நேர தகவல்களை நமக்கு வழங்குகிறது. இதன் மூலம், ஓட்டுநர்கள் பார்க்கிங் இடத்தை எளிதில் கண்டறியவும், பார்க்கிங் ஆபரேட்டர்கள் தங்கள் உடைமைகள சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறது.
ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் அம்சங்கள்
பார்க்கிங் இடங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், பார்க்கிங் எந்தெந்த இடங்களில் இருக்கிறது என்று உடனுக்குடனே நமக்கும் தெரிவிக்கின்றன. மேலும் ஓட்டுநர்கள் தங்கள் மொபைல் செயலிகள் மூலம் அருகிலுள்ள பார்க்கிங் இடங்களைக் கண்டறியவும், இடங்களை முன்பதிவு செய்யவும் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் உதவுகின்றன.
மேலும் சென்னைக்குள் அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனங்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பார்க்கிங் செயலியைப் பயன்படுத்தி, பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம்.
கட்டணம் செலுத்தாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் நபர்களின் வாகனங்களுக்கு பூட்டு போடப்படும், மேலும் 6 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தால் வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பார்க்கிங் இடங்களை ஒழுங்குபடுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கம்
சென்னையின் அண்ணா நகர் பகுதியில், பார்க்கிங் இடங்களின் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம், பார்க்கிங் இடங்களை முறைப்படுத்தவும், கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முடியும்.
ஸ்மார்ட் பார்க்கிங் அமைப்புகளின் நன்மைகள்
ஓட்டுநர்கள் பார்க்கிங் இடத்தை தேடும் நேரத்தைக் குறைக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும்.. மேலும் ஸ்மார்ட் பார்க்கிங் இடங்களை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம், அது நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. பார்க்கிங் இடத்தை தேடுவதால் ஏற்படும் எரிபொருள் செலவுகளை மிச்சப்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது.