விசிக மாநாட்டில் 6 பேர் மயக்கம்.. சாரத்தில் இருந்து விழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாடு மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தார்.
இதனால் காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தனர். மாலை 4 மணி அளவில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் மேடையில் நடந்து சென்று தொண்டர்களை சந்தித்து கையசைத்தவாறு சென்றார். அப்போது மாநாட்டு திடலில் இருந்த சில தொண்டர்கள் நெரிசல் மற்றும் வெயில் காரணமாக மயங்கி விழுந்தனர்.
மேலும் தலைவரை பார்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டவுட்டின் சாரத்தின் மீது சிலர் ஏறினர். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தனர். பாதிக்கப்பட்ட 8 பேரை உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தத்னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தொண்டர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயரமான இடங்களில் ஏற வேண்டாம் என தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
