சிவாஜி கண்ட அரசியல் களம்.. கணேசன் சிவாஜி ஆன கதை.. விரிவான பின்னணி!
தமிழ் சினிமாவில் நடிப்புக்கெல்லாம் முன்மாதிரி என்றால் அது சிவாஜி கணேசன்தான்.. கொஞ்சமாக நடித்துவிட்டாலே, ஆமா இவர் பெரிய சிவாஜி கணேசன் என்று சொல்வதுண்டு.. எம்ஜிஆரும் சிவாஜியும் சம காலத்தில் உச்சம் தொட்ட நடிகர்கள்தான் என்றாலும், அரசியலில் எம்ஜிஆர் தொட்ட உயரத்தை சிவாஜியால் தொட முடியவில்லை.. ஆதலால்தான் புதிதாக கட்சி தொடங்கும் ஒவ்வொருவரும், எம்ஜிஆரை முன்மாதிரியாக காட்டுகின்றனர்.
அதுசரி, தமிழக அரசியல் வரலாற்றில் 50களுக்குப் பிறகு நடிகர்களால் அதிக அளவில் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்த திராவிட இயக்கத்தில்தான் சிவாஜியும் இருந்தார்.. ஆனால், எம்.ஜி.ஆர் என்ற மூனெறெழுத்து உச்சரிக்கப்பட்ட அளவு சிவாஜியால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்று பலருக்கும் தோன்றலாம்.. சினிமாவில் எம்ஜிஆர் எப்படி மாஸோ.. சிவாஜி கணேசன் க்ளாஸ்.. சிவாஜி கணேசனின் நினைவு நாளான இன்று, அவரது அரசியல் வாழ்க்கை குறித்து சற்றே விவரிக்க முயல்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு..
தமிழ் சினிமாவில் சிவாஜி என்ற நடிகரைத் தாண்டி நடிக்க ஆள் இல்லை.. அத்தனைக்கும் என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார் சிவாஜி. இன்று எல்லோரும் சிவாஜி என்று கொண்டாடப்படும் அவரது பெயர் கணேசன். பராசக்திதான் அவரது முதல் படம் என்பது தெரிந்திருக்கும். அதில் சிவாஜி அனல் தெறிக்க பேசும் வசனம் கூட அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால், அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம், கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்ற பெயர் பெரியாரால் வைக்கப்பட்டது.
1949ம் ஆண்டு அண்ணாவால் துவங்கப்பட்ட திமுகவில் பல தளபதிகள் இருந்தாலும், தங்களது திரைப்படங்கள் மூலம் திமுகவையும், அதன் சித்தாந்தங்களையும் கொண்டு சேர்த்ததில் பிரதானமானவர்கள் என்றால் அது எம்ஜிஆர், சிவாஜிதான். கட்சி தொடங்கிய பிறகு, 1953ல் எம்ஜிஆர் திமுகவில் இணைந்தார் என்றால், கட்சி தொடங்கும்போதில் இருந்து, 1956ம் ஆண்டு வரை திமுக அபிமானியாக இருந்து பிறகு அங்கிருந்து வெளியேறினார் சிவாஜி கணேசன்.
தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு திரைத்துறையில் முழு கவனம் செலுத்தியவர், 1964 காலகட்டத்தில், காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் அபிமானியாக மாறினார். 1967ம் ஆண்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த எம்ஜிஆர் ஒருபக்கம் பரப்புரை செய்தால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வைக்கும் முயற்சியில் பிரச்சார பீரங்கியாக பரப்புரை செய்தார் சிவாஜி கணேசன். தேர்தலில், தோல்வியே கிடைத்தபோதும் காங்கிரஸில் பயணித்த அவர், கட்சி இரண்டாக உடைந்தபோது காமராஜர் பக்கமே நின்றார். எனினும், 1975ம் ஆண்டு காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் உறுப்பினர் ஆனவர், பிறகு 1983ல் ஓராண்டு ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார்.
முன்னதாக, தேர்தல் களத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் வார்த்தையால் யுத்தத்தையே நடத்தி முடித்தனர். ’நாடாள கலைஞர் இருக்கிறார்.. நடிப்பதற்கே போகட்டும் எம்ஜிஆர்’ என்றெல்லாம் முழங்கிய சிவாஜி, எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணியோடு கூட்டணி வைக்க கோரினார். அதை நிராகரித்த ராஜீவ் காந்தி ஜெயலலிதா அணியோடு போட்டியிட, ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியில் இருந்து விலகினார். அதோடு, 1988ம் ஆண்டு தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி, 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணியில் 50 இடங்களைப் பெற்று போட்டியிட்டார். அத்தனை தொகுதிகளிலும் தோல்வியே மிஞ்ச கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
தொடர்ந்து, 1990ம் ஆண்டு ஜனதா தளத்தின் தமிழக தலைவராக பதவியேற்ற சிவாஜி கணேசன், 1991ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார். அந்த தேர்தலில் 225 தொகுதிகளில் வெற்றிவாகை சூடிய அதிமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி படுதோல்வியடைந்த நிலையில், அத்தோடு அரசியலுக்கு முழுக்குப்போட்டு ஒதுங்கினார் சிவாஜி.
சர்வதேச அளவில் செவாலியர் விருது, தேசிய அளவில் பத்ம விருதுகள், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்டவற்றை வாங்கிக்குவித்த சிவாஜி கணேசனால், அரசியல் களத்தில் மட்டும் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியவில்லை.. பராசக்தியில் இருந்து தேவர் மகன், படையப்பா வரை, சிவாஜியின் நடிப்பு.. ஒவ்வொரு அசைவுகளையும் கொண்டாடி தீர்க்கும் தமிழ் சமூகம், அவர் அரசியலில் தோற்றபோதும் தூற்றியதில்லை.. அந்த அளவுக்கு அன்பை பெற்று என்றென்றும் கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் தலைமகனாக திகழ்கிறார் சிவாஜி கணேசன். அவரது நினைவுநாளான இன்று, பலரும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.