சிவகங்கை: பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போது திடீரென வெடித்த ப்ளூடூத் ஹெட்செட்! என்ன நடந்தது?
செய்தியாளர்: நாசர்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மாத்து கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னல் அடித்துள்ளது.
இந்நிலையில், பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஹெட்செட் திடீரென எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் பன்னீர் செல்வத்தின் காதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பன்னீர் செல்வத்தின் அலறலை கேட்ட உறவினர்கள் அவரை மீட்பு காளையார் கோவில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அழைத்துச் சென்ற உறவினர்கள், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.