SIR | வரைவு வாக்காளர் பட்டியலில் இயல்புக்கு மாறான தரவுகள்? இறந்ததாக நீக்கப்பட்டவர்கள் யார்?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் இறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை மற்றும் இறப்பு விகிதாச்சாரத்துக்கு முரணாக உள்ளது. 495 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்ட அனைவரும் இறந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆழமான ஆய்வுகள் தேவை என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத்திருத்த பணிக்கு பின் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் சில இயல்புக்கு மாறாகவும் கவலை தரும் வகையிலும் உள்ளன. உதாரணமாக 495 வாக்குச்சாவடிகளில், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அனைவருமே இறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை போக்கிற்கு முரணாக உள்ள நிலையில் இது பற்றி ஆழமான ஆய்வுகள் தேவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வாக்குச்சாவடி அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை தி இந்து பத்திரிகை ஆய்வு செய்தது. இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரட்டைப்பதிவு அல்லது குறித்த முகவரியில் வசிக்காதவர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 75 ஆயிரத்து 18 வாக்குச்சாவடிகளில் இருந்து சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் தரவுகளின் தன்மை இயல்புக்கு மாறாக இருப்பது போல் தெரிகிறது.
இதில் மிகவும் கவனத்தை ஈர்ப்பது என்னவென்றால் 103 தொகுதிகளில் உள்ள 495 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்டவர்கள் அனைவருமே இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுதான். சில வாக்குச்சாவடிகளில் 130க்கு மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருமே இறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 904 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்தினர் இறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 727 வாக்குச்சாவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள இறப்புக்கணக்கு மாநில சராசரியை விட 3 மடங்கு அதிகம். 14 வாக்குச்சாவடிகளில் இறந்தவர்கள் என குறிப்பிடப்பட்டவர்களில் பாதிப்பேரின் வயது 50க்கு கீழாக உள்ளது. இது இறப்பு - வயது விகிதாச்சார போக்கிற்கு முரணாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதி வாக்குச்சாவடி ஒன்றில் 58 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் 49 பேர் 50 வயதுக்கு கீழானவர்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் இறந்துவிட்டனர் என 111 பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில் அதில் 65 பேர் 50 வயதுக்கு கீழானவர்கள். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் இறந்ததாக 51 பேர் நீக்கப்பட்ட நிலையில் அதில் 29 பேர் 50 வயதுக்கு கீழானவர்கள். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் 131 பேர் இறந்ததாக நீக்கப்பட்ட நிலையில் அதில் 74 பேர் 50 வயதுக்கு கீழானவர்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 130 பேர் நீக்கப்பட்ட நிலையில் அதில் 73 பேர் 50 வயதுக்கு கீழானவர்கள்.
35 வாக்குச்சாவடிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 75 சதவீதத்தினர் பெண்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 6 ஆயிரத்து 139 வாக்குச்சாவடிகளில் ஆப்சென்ட் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும் இது போன்ற முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகிறது.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் குறித்து தீவிரமான கேள்விகள் எழுப்பியுள்ளன. இது போன்ற விவகாரங்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது

