\
singapen athiradi padai launched by cm vijay
cm vijayx page

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்.. CM விஜய் கொடுத்த வார்னிங்!

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட அத்தனை பெண்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார்.
Published on

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும் முதல்வர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' என்ற புதிய பெண்கள் பாதுகாப்பு பிரிவை துவங்கி வைத்தார்.

செய்தியாளர்: விக்கி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்த சூழலில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக முதல்வர் விஜய் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'யைத் துவக்கி வைத்துப் பேசினார். இதில் பேசிய அவர், “ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட அத்தனை பெண்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். நம் சமூகத்தில் ஒரு தனிமனித ஒழுக்கமாகவும், கட்டுப்பாடான பொறுப்புடனும் வாழ்ந்தாலே இதுபோன்ற பல அச்சுறுத்தல்களை நாம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும்” என்று பேசினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்துப் பேசும்போது முதல்வர் விஜய் மிகவும் கனத்த குரலில், "பெண்களைத் தொந்தரவு செய்துவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு நான் வெளிப்படையாக இதைச் சொல்கிறேன். பெண்கள் பாதுகாப்பைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளவே முடியாது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் வார்னிங் விடுத்தார்.

குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதல்வர், ”பெண்களுக்கு எதிராகத் தப்பு செய்பவர்களுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் காவல் துறையினரால் வேகமாகவும், துரிதமாகவும் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

”உண்மையாகத் தப்பு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக மிகக் கடுமையான தண்டனையைத் வேகமாக வாங்கித் தர வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தத் தண்டனையின் தீவிரத்தைப் பார்த்து, எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக ஒரு சிறிய தவறைக்கூடச் செய்ய நினைப்பவர்களின் மனதில் பயம் உருவாகும்” என்றும் முதல்வர் விஜய் கடுமையான வார்த்தையில் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com