10 நாட்களில் சவரனுக்கு ரூ.9000 குறைந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் கிடு கிடு உயர்வு!
சில நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தை, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம் விலை மாற்றத்துக்கு காரணமாகும்.
உலக அளவில் அசாதாரண சூழல் ஏற்படும் போது தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்படும். அந்த வரிசையில், உக்ரைன் போர், காசா மீதான இஸ்ரேல் தாக்குதல், இந்தியா பாகிஸ்தான் மோதல் என தொடர் பதற்றமான சூழல் காரணம் தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றம் கண்டு வந்தது. அதாவது 22 காரட் ஆபரணத் தங்கம் ஆனது சுமார் 97,000 வரை விற்பனை ஆனது. ஆனால், கடந்த அக்டோபர் 19 முதல் தங்கம் விலையில் தொடர் சரிவு இருந்து வந்தது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருந்தது.
திடீர் விலை சரிவுக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டது. தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், அதன் மூலம் லாபம் ஈட்டுவதற்காக முதலீட்டாளர்கள் தங்கள் வசமுள்ள தங்கத்தை விற்கத் தொடங்கினர். முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட தங்கத்தை விற்கும்போது, சர்வதேச சந்தையில் அதன் விலை குறைவது வழக்கம் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படட்டது.
இந்நிலையில், தொடர் சரிவுக்கு பின் அக்டோபர் 29ஆம் தேதியான இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து 11, 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 1080 ரூபாய் உயர்ந்து 89 ,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் மாலையில் பங்குச் சந்தை முடிவிலும் சற்றே உயர்வு காணப்பட்டது. கூடுதலாக சவரணுக்கு 920 ரூபாய் உயர்ந்தது. அதாவது, ஒரே நாளில் சவரனுக்கு 2000 ரூபாயும், ஒரு கிராமுக்கு 250 ரூபாயும் உயர்ந்தது.

