தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்pt web

மும்மொழிக் கொள்கை ஆதரவு போராட்டம் | “எங்களை ஒன்றும் செய்ய முடியாது..” - தமிழிசை சௌந்தரராஜன் உறுதி

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு திரட்டும் விதமாக சென்னையில் மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் நின்று பொதுமக்களிடம் தமிழிசை கையெழுத்து பெற்றார். அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த நிகழ்வின்போது, பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Published on

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் விதமாக கையெழுத்து இயக்கத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அனுமதியில்லாமல் கையெழுத்து இயக்கம் மேற்கொள்வதாக கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பொதுமக்களிடம் கையெழுத்துபெற்றுவிட்டுதான் புறப்படப்போவதாக தமிழிசை கூறினார். 3 மணிநேரம் ஒரே இடத்தில் நின்றதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழிசையை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டனர். அப்போது அதை அறிந்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்தது.

தொடர்ந்து காவல்துறையினர் தமிழிசையை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு செல்லும்படி அனுமதி அளித்தனர். எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும் சமகல்விக்கான போராட்டம் தொடரும் என்று தமிழிசை தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
மும்மொழி விவகாரம் | “உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்” முதல்வருக்கு கவிஞர் தாமரையின் பாராட்டு!

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “லட்சக்கணக்கில் இணையத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். காவல்துறையினரின் அடக்குமுறையை மீறி பொதுமக்கள் வந்து கையெழுத்துப் போட்டனர். அத்தகைய பொதுமக்களுக்கு நான் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் எங்களோடுதான் இருக்கின்றனர் என்பது இன்றைக்கு எங்களுக்குத் தெரிகிறது. நாங்களும் அவர்களுடன் இருப்போம். இந்த கெடுபிடிகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. இந்த கெடுபிடிகளிலும் ஒன்றரைக் கோடி கையெழுத்துகளை வாங்குவோம்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து எம்ஜிஆர் நகர் மக்களிடம் கையெழுத்து பெற்று விட்டு தமிழிசை உள்ளிட்டோர் கலைந்து சென்றனர். அப்போது திமுகவினர் தமிழிசை கைது செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பியவாறு காரை முற்றுகையிட முற்பட்டதால் பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி முழக்கமிட்டனர்.

தமிழிசை சௌந்தரராஜன்
லண்டனில் ஜெய்சங்கர் காரை மறித்து கோஷம்; தேசியக்கொடி கிழிப்பு.. பாதுகாப்பு மீறலுக்கு இந்தியா கண்டனம்!

இதேபோல, நெல்லை டவுனில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக வர்த்தக அணி மாநில தலைவர் ராஜகண்ணன் உள்ளிட்டோர் வீதிவீதியாக சென்று கையெழுத்து பெற்றனர்.

சேலம் செவ்வாய்பேட்டை, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்கள், மாணவ, மாணவியரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தினர்.

தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை பெண்ணை கரம் பிடித்தார் பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா! அண்ணாமலை நேரில் வாழ்த்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com