லண்டனில் ஜெய்சங்கர் காரை மறித்து கோஷம்; தேசியக்கொடி கிழிப்பு.. பாதுகாப்பு மீறலுக்கு இந்தியா கண்டனம்!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், லண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
அப்போது அந்த கட்டடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதுடன் அவரின் காரை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதில் ஒருவர் ஆவேசமாக கோஷமிட்டப்படி இந்திய தேசியக் கொடியை கிழித்தார். உடனே அந்த நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஜெய்சங்கர் காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்தில் தேசியக் கொடி கிழிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கத்தின் செயலைக் கண்டிக்கிறோம். ஜனநாயக அரசு அளித்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இச்செயல், கவலை தருகிறது. சம்பந்தப்பட்ட அரசு, கடமையை உணர்ந்து செயல்படும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்