வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுக்கக்கூடாது - சீமான்
தமிழக வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். பிஹாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பிஹாரில் இருந்து வெளியேறிய சுமார் ஆறரை லட்சம் வாக்காளர்களில் பலர் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களின் பெயர் பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், அப்பெயர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதேப் போன்று பல வெளிமாநில வாக்காளர்களின் பெயர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது தமிழக தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல்கட்சித் தலைவர்கள் அஞ்சம் தெரிவிக்கின்றனர்.
வாக்காளர்களை மாநிலம், மொழி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில அரசியல்கட்சி தலைவர்கள் மக்களை திசை திருப்ப பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம்சாட்டினார். வடமாநில இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்றும், தேர்தல் நேரத்தில் அவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சென்றுவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு நிலத்தின் அரசியல், அதிகாரத்தை தீர்மானிக்கும் முடிவை வடமாநிலத்தவர்களுக்கு வழங்க கூடாது எனக் குறிப்பிட்டார்.