பெரியார் சிலை மீது காலணி வீச்சு.. திருமாவளவன் போராட்டம்
சென்னையில் பெரியார் சிலை மீது மர்ம நபர் காலணி வீசியதையடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர் ஒருவர் இன்று காலணி வீசினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினார். பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read Also -> என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’?
முன்னதாக, தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.