
மதுரை அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே நுங்கு வியாபாரி ஒருவரை, மது போதையில் நான்கிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தரதரவென இழுத்துச் சென்று கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதற்கட்ட தகவலில் அந்த வியாபாரி நுங்கு வியாபாரம் செய்வதற்காக அந்த பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அப்போது அவர் தனது இருசக்கர வாகனத்தை அங்கிருந்த சில இளைஞர்களின் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நுங்கு வியாபாரியை இளைஞர்கள் கடுமையாக தாக்கியதோடு அவரது ஆடைகளை கிழித்து நடுரோட்டில் வைத்து தாக்கி உள்ளனர் என தெரிகிறது. இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்த நிலையில், அது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து தெப்பக்குளம் காவல்துறையினர், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் பொது இடத்தில் வியாபாரி ஒருவரை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.