மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - தலைமை செயலாளர் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஷிவ்தாஸ் மீனா
ஷிவ்தாஸ் மீனாpt web

தெற்கு அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது நவம்பர் 28ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது.

michaung cyclone
michaung cyclone

நவம்பர் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுவடைந்த நிலையில், அதற்கு மிக்ஜாம் என பெயர் வைக்கப்பட்டது. புயல் உருவானதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று புயலின் தீவிரம் காரணமாக விடாது பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. அதனை அடுத்து புயல் சென்னையை விட்டு விலகி ஆந்திராவின் நெல்லூர் - கவாலிக்கு இடையில் கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட படகுகளில் 139 படகுகள் பயன்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மழை நின்றுவிட்டது. தற்போது மழை நீர் படிப்படியாக குறைந்துவருகிறது. ஆறுகளைப் பொறுத்தவரை வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. முழுவதுமாக வடிவதற்கு சில நேரம் ஆகலாம்.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் என இரு தினங்களில் 411 பாதுகாப்பு முகாம்களில் மொத்தமாக 32 ஆயிரத்து 158 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 4 மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 1200 மீன்பிடி படகுகள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளன. சில மீனவர்களின் கட்டுமரங்கள், வலைகள் என 3500 வரை பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அதை அகற்றுவதற்கு மற்ற மாவட்டங்களில் இருந்து 3000 பேரை வரவழைத்துள்ளோம். இன்னும் 2000 பேர் இன்று மாலைக்குள் வந்துவிடுவார்கள். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 1000 பம்புகளைக் கொண்டு அகற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “தீயணைப்புத்துறை சார்பாக சென்னை மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆட்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக 305 புகார்கள் வந்தது. அது சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை மீட்டுள்ளனர். 55 கால்நடைகளையும் மீட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com