தமிழ்நாடு | பட்டியலின பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்.. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா?
செய்தியாளர் மதுரை பிரசன்னா
தமிழ்நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் நீதி வழங்கும் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக எவிடன்ஸ் மனித உரிமை அமைப்பின் புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. வன்முறை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் மூன்று முதல் ஐந்து விழுக்காடு என்ற அளவிலேயே இருப்பதாக எவிடன்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தண்டனை விகிதம் 3% முதல் 5% வரை மட்டுமே உள்ளது என ‘எவிடென்ஸ்’ என்ற அரசுசாரா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த அமைப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கி ஆறு வருடங்களில் 26 மாவட்டங்களில் நடைபெற்ற 90 பாலியல் வன்முறை வழக்குகளை ஆய்வு செய்தது. இவற்றில், மூன்று வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 69 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 13 வழக்குகள் இன்னும் காவல் துறை விசாரணையில் உள்ளன. 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த 90 வழக்குகளில், ஆய்வு செய்யப்பட்ட வழக்குகளில் 98% வழக்குகளில் குற்றப்பத்திரிகை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்று எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கதிர் கூறியுள்ளார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு உள்ள காலக்கெடுவை காவல் துறை பின்பற்றுவதில்லை. சில வழக்குகளில் ஐந்து வருடங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள்; பலர் சாதி இழிவுரைகள், பாலியல் வன்புணர்ச்சி, மிரட்டல், கொலை போன்ற வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர். அனைத்து பெண்களும் மனஅழுத்தத்திலும் பயத்திலும் வாழ்கிறார்கள் என அறிக்கை கூறுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் சம்பவம் நடந்த தேதியிலிருந்து குறைந்தபட்சம் 5 மாதங்கள் முதல் அதிகபட்சம் 8 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கதிர் வலியுறுத்தியுள்ளார்.
