பிஹார் தேர்தல் | இரு கைகளிலும் மை.. 2 முறை வாக்களித்தாரா எம்.பி.? கிளம்பிய சர்ச்சை!
பிஹார் சட்டமன்றத் தேர்தலில், லோக் ஜனசக்தி எம்.பி. ஷாம்பவி சவுத்ரியின் இரு கைகளிலும் மை இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இது சாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது. அவர் விளக்கமளித்தபோது, இது வாக்குச்சாவடி அதிகாரியின் தவறு என்று தெரிவித்திருக்கிறார். இதனால், தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
234 தொகுதிகள் கொண்ட பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவில், எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு கோரப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,121 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 455 வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு, எந்த இடத்திலும் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று தெரிய வந்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிகார் தேர்தல் வாக்குப்பதிவின்போது, லோக் ஜனசக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சாம்பவி சவுத்ரியின் இருகைகளிலும், மை வைக்கப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவின்போது, சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அவரது இரு கைகளிலும் மை வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், ஷாம்பவி முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டுகிறார். அந்த விரலிலும் மை அடையாளம் தெரிகிறது. இது, இணையத்தில் எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அவர் இரண்டு முறை வாக்களித்ததாகக் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் காஞ்சனா யாதவ், "இது முற்றிலும் புதிய அளவிலான மோசடி. இது லோக் ஜனசக்தி எம்.பி. ஷாம்பவி சவுத்ரி. அவர், இரண்டு கைகளிலும் மை வைத்திருக்கிறார், அதாவது அவர் இரண்டு முறை வாக்களித்திருக்கிறார். இது வெளிச்சத்திற்கு வந்தபோது, அவருடைய தந்தை அசோக் சவுத்ரி அவருக்கு கண்களால் சைகை காட்டுவதைக் காண முடிந்தது. தேர்தல் ஆணையமே, இது எப்படி நடக்கிறது? இதை யார் விசாரிப்பார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸும் கேள்வி எழுப்பியுள்ளது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையானதோடு, இதுகுறித்து தேர்தல்ஆணையம் உரிய விளக்கம் அளிக்கம் வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தினர்.
இப்படி, இணையத்தில் ஊகங்கள் அதிகரித்ததால், ஷாம்பவி சவுத்ரி இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். ”இரட்டை மை அடையாளங்கள் வாக்குச்சாவடி அதிகாரி செய்த தவறின் விளைவாகும்” என்று தெளிவுபடுத்தினார். ”வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், ஆனால் தலைமை அதிகாரி அதை சரிசெய்துவிட்டு, ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார். அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன" என்று அவர் விளக்கினார். ”பெரிய அளவிலான தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் அசாதாரணமானது அல்ல என்றும், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம்” என்றும் எம்.பி. வலியுறுத்தினார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாட்னா மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ”எம்.பி. ஷாம்பவி வாக்களித்தபிறகு அவரது இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் இருப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, 182-பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் புத்த காலனி (பிரதானப் பிரிவின் வடக்கு அறை) சாண்ட் பால்ஸ் தொடக்கப்பள்ளி எண். 61, வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மை அடையாளம் இடும் பணியில் இருந்த வாக்கு சாவடிப் பணியாளர் தவறுதலாக முதலில் வலது கையிலுள்ள விரலில் மை அடையாளம் இட்டார். பின்னர் தலைமை அதிகாரியின் தலையீட்டின் பேரில் இடது கையிலுள்ள விரலிலும் மை அடையாளம் இடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

