108 ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி; வெளியான பரபரப்புத் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, ஓட்டுநர், நடத்துநர், உதவியாளர் பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதியை அடுத்து இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் சோதனையிட்டனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சோதனையின் போதே ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஜூன் 21 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேசமயத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மற்றும் அமலாக்கத்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரு முறை அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com