தொகுதி மாறிய செந்தில் பாலாஜி.. கோவை தெற்கை தேர்வு செய்தது ஏன்.? - அதிமுக வேட்பாளர் சொல்வது என்ன?
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த சூழலில் தான், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் 60 புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதாவது, கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுந்த நிலையில், இம்முறை அவருக்கு கோவை தெற்கு தொகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. கரூர் தொகுதிக்கு திமுக சார்பில், ஆசி.எம். தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே, கோவைத் தெற்கு தொகுதிக்கு அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, கரூரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே, அவரை எதிர்கொள்ளப் பயந்து நடுங்கிப்போய் செந்தில் பாலாஜி கோவைக்குத் தப்பியோடி வந்திருப்பதாக அவர் சாடினார். விஜயபாஸ்கர் பெயர் அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே செந்தில் பாலாஜிக்குக் காய்ச்சலே வந்துவிட்டதாகவும் சொந்தத் தொகுதியை விட்டு அவர் வெளியேறுவதற்குக் காரணமே தோல்வி பயம் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பரப்பளவில் சிறியது என்பதால், இங்குள்ள மக்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்றும், ஏதோ ஒன்றைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்றும் செந்தில் பாலாஜி இங்கு வந்திருப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார். தான் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற உரிமையோடு இங்கு வந்திருப்பதாகக் கூறிய அவர், செந்தில் பாலாஜிக்கு முதலில் அவர் கட்சிக்காரர்களே ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என விமர்சித்ததுடன் செந்தில் பாலாஜியை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவேன் என்றும் அம்மன் அர்ஜுனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

