ராஜினாமா செய்யும் செந்தில் பாலாஜி? அங்கீகரிக்கும் உதயநிதி ஸ்டாலின்; கோவையில் காத்திருக்கும் சம்பவம்!
அமைச்சர் பதவியா.. ஜாமீனா என்ற உச்சநீதிமன்ற கெடுவால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இன்று நடைபெறும் விழாவில் துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்வில் செந்தில் பாலாஜியும் கலந்துகொள்கிறார். இந்த ஆட்சி காலத்தில் அமைச்சராக இதுவே அவருக்கு கடைசி நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இன்று மாலை செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக, செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்பட்ட நிலையில், விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கெடு விதித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமின் வேண்டுமா? என்பதை முடிவு செய்து திங்கட்கிழமைக்குள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாலும் அவரது பரிந்துரையின் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற இளங்கோவிற்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவர், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தோற்கடித்தவர் என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று மாலை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், கோவையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதியோடு மேடையை பகிர்ந்துகொள்கிறார் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், அவருக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலும், அவர் ராஜினாமா செய்வதற்கு முன்பாக, கோவை நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார் உதயநிதி.
முன்னதாக, நேற்றைய தின சட்டப்பேரவை நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருந்த மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மசோதா நேற்றைய தினம் தாக்கலானாலும், பேரவையின் இறுதி நாளன்றுதான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாகும். அப்படிப்பார்த்தால் வரும் 29ம் தேதியுடன் பேரவை கூட்டம் முடிவடைகிறது. இதனால் செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், சட்டமாகும் நாளன்று அவரால் பதில் அளிக்க முடியாது. இதனால் அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்ததாக தெரிகிறது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, செந்தில் பாலாஜியின் ராஜினாமா உறுதியானதாகவே தெரிகிறது.