”இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்” .. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவரும் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தநிலையில், இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று அனுப்பி வைத்தார். ஆனால், முதல்வரின் கடிதம் 'Mislead and Incorrect' ஆக இருப்பதாகக் கூறி, ஆளுநர் ரவி திருப்பியனுப்பினார்.

தொடர்ந்து ஆளுநரின் கடித்திற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கடிதமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, ‘செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது’ எனக் கூறி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துள்ளார். அதேநேரத்தில், ‘அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்குக் கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக எதிர்ப்பு

முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தங்களது அழுத்தமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

”இந்த விஷயத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை நம்முடைய தேச அமைப்பு கொடுத்திருக்கிறது. ஏனெனில் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருக்கிறார். கைது செய்யப்பட்டிருக்கிறார். உடல்நிலை சரியில்லை என்பதால்தான் அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இல்லையென்றால், அவர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும். ஆகையால், ராஜினாமா செய்ய சொல்ல வேண்டியதே முதல்வரின் கடமைதானே” என பாஜகவைச் சேர்ந்த சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த சீனிவாசன் கூறும் கருத்துகளை முழுவதுமாகக் கேட்க இந்த வீடியோவில் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com