திமுக எம்.எல்.ஏ மறைவு - முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி (74) இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சார்ந்த பொன்னுசாமி (74) பதவி வகித்து வந்தார். இவர், நேற்று வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு வீட்டில் இரவு உறங்கிய நிலையில் இன்று காலை அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, எம்.பி, ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பொன்னுசாமி அவர்கள், கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவிலிருந்து இணைந்த அவர் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை அடுத்து 2006 - 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். தொடர்ந்து 2011, 2016 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும், நான்காவது முறையாக சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தற்பொழுது வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இவர், கொல்லிமலை பகுதியில் வசித்து வரும் இவர் சோளக்காட்டில் பழக்கடையும் நடத்தி மிக எளிமையான மனிதராக மக்கள் எளிதில் அணுக கூடிய மனிதராக மக்கள் பணியாற்றி வந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், எம்.எல்.ஏ பொன்னுசாமி-க்கு மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கள் தெரிவித்துள்ளார். அதில், "சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் திரு. கு.பொன்னுசாமி அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.