சிறைக்கு செல்கிறாரா அமைச்சர் பொன்முடி?; திமுகவிற்கு நெருக்கடியா? - பத்திரிக்கையாளர் ஷ்யாம் விளக்கம்

"திமுகவிற்கு இது அரசியல் அழுத்தம் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியா கூட்டணிக்கும் மறைமுகமான ஒரு அழுத்தம் தான்" பத்திரிக்கையாளர் ஷ்யாம்.
பத்திரிக்கையாளர் ஷ்யாம்
பத்திரிக்கையாளர் ஷ்யாம்pt web

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி இருப்பதாகவும், தீர்ப்பு நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர் பொன்முடி முன் உள்ள வாய்ப்புகள் என்ன?, திமுகவிற்கு அழுத்தம் அதிகரிக்கிறதா என்பன குறித்து, பெருஞ்செய்தி பகுதியில் மூத்த பத்திரிகையாளர் எஸ். ஷ்யாம் உடன் நெறியாளர் தமிழினியன் கலந்துரையாடினார்.

பத்திரிக்கையாளர் ஷ்யாம் அளித்த பதிலில் சில, “திமுகவிற்கு இது அரசியல் அழுத்தம் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியா கூட்டணிக்கும் மறைமுகமான ஒரு அழுத்தம் தான். சென்னை உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் போது குற்றம் உறுதிபட்டுவிட்டது என்று பொருள் படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட உடனேயே தகுதி இழப்பு வந்துவிடும். திமுகவிற்கு அரசியல் பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அரசியல் கட்சியாக அதை சமாளிப்பதற்கு திமுகவிற்கு வலு உள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் கட்சியின் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொன்முடியை பொறுத்தவரை மாவட்ட செயலாளராக தொடர்ந்து நீடிப்பார். அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படும் போது அரசியல் உரையாடலில் ஒரு பின்னடைவு ஏற்படும்.

திமுக இந்த கட்டத்தில் ஒரு நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இந்த வழக்குகள் போன்ற பிரச்சனைகளில் இருப்பவர்கள் கட்சிப்பணிகளுக்கு செல்லலாம். இதற்கு முன்பும் அதற்கான உதாரணங்கள் இருந்துள்ளன.

இது திமுகவிற்கு எதிராக அரசியல் மேடைகளில் பேசுவதற்கான வாய்ப்பு தான். வெறுமனே ஊழல் குற்றச்சாட்டுகளால் தேர்தலை வென்றவர்கள் கிடையாது. யாருமே வெற்றி பெற்றிருக்க முடியாது. அப்படி அமைந்தால் அது பெரிய விஷயம். ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி அமைவதில்லை. திமுக இன்னும் தீவிரமாக அரசியல் செய்ய வேண்டும் என்றால் சீனியர் அமைச்சர்கள் கட்சிப்பணிக்கு செல்லலாம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com