“திமுக அரசை காப்பாற்றக்கூடிய வேலையை அண்ணாமலை செய்து வருகிறார்” - விளாசிய பத்திரிகையாளர் மணி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். அதில், தன் வீட்டு வாசலில் சாட்டையால் சட்டை அணியாத தன் உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார் அண்ணாமலை. இதனை கண்ட அண்ணாமையின் ஆதரவாளர்களில் சிலரும், அவரைப்போல தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக்கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இந்த சூழலில், அண்ணாமலையின் இந்த செயலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளான ஒன்றாக மாறியது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணி நம்மிடையே தெரிவிக்கையில்,
“instead of debating action... we are debating reaction”
"திமுக அரசை காப்பாற்றக்கூடிய வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அண்ணாப்பல்கழைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த கொடுமை என்பதுதான் action. ஆனால், அதைப்பற்றி விவாதிக்காமல் நாட்டை ஆளக்கூடிய கட்சியில் இருக்க கூடிய ஒருவர், செய்த சிறுபிள்ளை தனமான ஒன்றை பற்றி நாம் விவாதித்து கொண்டிருக்கிறோம்.
சவுக்கால் அடித்துக்கொள்வது என்பது அபத்தமான ஒன்று. தீமை சமூகத்தில் இழைக்கப்படும்பொழுது நாம் எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதற்கு, பல வழிமுறைகள் இருக்கின்றன. உலகில் யாரும் கண்டறியாத வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுத்தவர் மகாத்மா காந்தி. அதுதான் உண்ணாவிரதப்போராட்டம்.
தன்னை வறுத்துக்கொள்வது என்பது அப்படி இருக்க வேண்டும். சவுக்கால் தன்னை அடித்துக்கொள்வது என்பது மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கை. ஒருவேளை தன்னுடைய இந்த செயலுக்கு மாறாக, அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தால் எல்லாருடைய கவனமும், அண்ணாப்பல்கலை வழக்கில் திமுக அரசின் தவறுகளின் மீதும், கடமை தவறிய காவல்துறை மீதும், திரும்பி இருக்கும்.
இப்போது பாருங்கள்... அண்ணாமலை சவுக்கால் அடிப்பது சரியா தவறா என்று கீழ்த்தரமான ஒன்றை பற்றி நாம் இப்போது விவாதித்து கொண்டிருக்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் instead of debating action we are debeating reaction என்று சொல்வர்.
“திமுக அரசை காப்பாற்றும் வேலை”
இது திமுக அரசை காப்பாற்றும் வேலை. தெரிந்தோ தெரியாமலோ அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்தை காப்பாற்றும் வகையிலும்தான் அண்ணாமலை ஈடுபட்டு கொண்டிருக்கிறார் என்பது என் கருத்து.
முதன்மையாக நாம் விவாதிக்க வேண்டியது காவல்துறையின் செயல்பாடுகள். எஃப் ஐ ஆர் எப்படி லீக் ஆனது? இதுக்குறித்து நீதிமன்றமும் கேள்வி எழுப்புகிறது. ஆனால், நாம் இதை விவாதிக்காமல் அண்ணாமலை சவுக்கால் அடித்ததை குறித்து நாம் விவாதிக்கிறோம்.
இரண்டு விதமாக இந்த அண்ணா பல்கலைக்கழகப் பிரச்னையை கையாள வேண்டும். ஒன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையை காக்க வேண்டும் என்பது. அதை இந்த அரசு தவறிவிட்டது. இரண்டாவது இது ஒரு சமூக பிரச்னை. இதில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் ஸ்டிக்மாவை நாம் அகற்றவேண்டும்” என்று தெரிவித்தார்.