ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு - நீதிபதிகள் சொன்னது என்ன? தெளிவாக விளக்கிய மூத்த வழக்கறிஞர்!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்திருந்தது. இதன் தீர்ப்பு இன்று வந்துள்ளது.
தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை.’ என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் விஜயன் தெரிவிப்பது என்ன பார்க்கலாம்.
” இந்த தீர்ப்பில், கால கெடு அளவிற்கு, ஒரு விடை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படையில் பார்த்தால், ஆளுநருக்கு தனி அதிகாரம் என்று எதுவும் இல்லை. அவர் மந்திரி சபையினுடைய அறிவுரைக்கு ஏற்பதான் இந்த மாதிரி விஷயங்களில் முடிவெடுக்கிறார். அவர் ஒரே ஒரு முறை திருப்பி அனுப்பலாம். திருப்பி அனுப்பப்பட்ட அந்த மசோதா மீண்டும் திருத்தங்களுடோ அல்லதுஅதேபோல வந்தால் ஆளுனருக்கு மாற்று அதிகாரம் இல்லை.
ஆனால், எத்தனை காலம் மசோதாவை கிடப்பில் நிறுத்தி வைத்திருக்கலாம் என்கின்ற விஷயம் சட்டரீதியாக ஒரு தீர்க்கப்படாத ஒரு முடிவாகவே இருந்தது. அது இப்போது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆளுநருடைய இந்த செயல்பாடு அவருக்கு தனி அதிகாரம் இல்லை, அவர் சட்டத்தின் ஆட்சியின் படி நடக்கும் பொழுது அவர் ஒரு நீதிமன்றம் அல்ல என்பதை புரியவைத்திருக்கிறது.
சட்டமன்றத்தில் முறையாக தாக்கல் செய்யப்பட்டு அதே சட்டமன்றத்தில் உள்ள கவுன்சில் ஆப் மினிஸ்டர்ஸ் அமைச்சரின் மூலம் அறிவுரை செய்யப்பட்டிருந்தால் ஆளுநருக்கு வேறு எந்த புகழிடமும் இல்லை அவர் அதை கண்டிப்பாக செயல்படுத்திதான் ஆக வேண்டும்.
ஆனால், சட்டத்தின் ஆட்சி மறுக்கப்படும் போது அந்த சட்டத்தின் ஆட்சியில் அரசியலமைப்பு சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் நடந்து கொள்ளாததனால் வருகின்ற ஒரு பிரச்சனைதான் இது. இரண்டாவது இதில் கவர்னர் என்கிறவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், ஏதோ மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஒருத்தர் என்று நினைக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.