ஷ்யாம்
ஷ்யாம்pt

'இணக்கமாக செயல்படணும்; இல்லைனா, பதவியை விட்டு ஆளுநர் விலகணும்' - தீர்ப்பு குறித்து ஷ்யாம் கருத்து!

" மக்கள் தேர்ந்தெடுத்த 234 எம்எல்ஏக்கள் கொண்டு இயற்றப்படும் சட்டங்கள் ஜனநாயகத்தில் உருவானவையாகவே கருதப்பட வேண்டும். " - ஷ்யாம்
Published on

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்திருந்தது.

இந்தவழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தநிலையில், தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை.’ என்று தீர்ப்பளித்திருந்தது.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கருத்து கேட்கப்பட்டது.

தராசு ஷ்யாம் - ஆளுநர்
தராசு ஷ்யாம் - ஆளுநர்புதிய தலைமுறை

அவர் தெரிவிக்கையில், ” மசோதாக்களை 'நிலுவையில் வைத்திருப்பது' என்பது நிராகரிப்பாகக் கருதப்படும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த விதிமுறையும் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கை 'தமிழ்நாடு அரசு Vs ஆளுநர் ஆர்.என். ரவி' என்ற ஒரே ஒரு சம்பவமாக மட்டும் பார்க்கக் கூடாது. இது இந்தியாவிலுள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் பொதுவான சட்ட நெருக்கடியாகும்.

ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் மாநில அரசின் ஊழியர்களாகவே செயல்பட வேண்டும். மாநில அரசு முன்வைக்கும் சட்டங்களை, சட்டமன்றம் விவாதித்து நிறைவேற்றும் போது, அவற்றைப் புறக்கணிக்கவும், அல்லது நிலுவையில் வைக்கவும், ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை.

மக்கள் தேர்ந்தெடுத்த 234 எம்எல்ஏக்கள் கொண்டு இயற்றப்படும் சட்டங்கள் ஜனநாயகத்தில் உருவானவையாகவே கருதப்பட வேண்டும்.

ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர். தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.

இனி அவர் மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். இல்லையெனில், அந்தப் பதவியை விட்டு விலக வேண்டும். இதனை நிச்சயமாக ஒரு சட்ட நெருக்கடியான நிலைதான்.

ஷ்யாம்
”ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது” - தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

'Constitutional Custodian' (அரசமைப்பின் பாதுகாவலர்) என்பது ஒரு நிலைப்பாடு.
'Constitutional Conscience' (அரசமைப்பின் மனசாட்சி) என்பது மற்றொரு முக்கிய அம்சம். ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் இந்த மனசாட்சியோடு செயல்பட வேண்டும். இவர்கள் "நான் தான் முடிவெடுப்பேன்" எனக் கூறவும் முடியாது. தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில், மக்களின் நலனுக்காகத்தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. மக்களின் நலன் என்பது, சட்டமன்றம் வடிவமைக்கும்நிலையில் அதனை சட்டமன்றம்தான் தீர்மானிக்க முடியும். அதனால்தான் உச்சநீதிமன்றம் இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தீர்ப்பளிக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com