செங்கோட்டையன் வைத்த Twist.. தலைவர்கள் சொல்வதென்ன?
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. பின்னர் அமைதி காத்து வந்த செங்கோட்டையன் கடந்த 5 ஆம் தேதி கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், அதிமுக-வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அப்படி, இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, எடப்பாடி பரப்புரை மேற்கொண்ட பல இடங்களில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அதிமுக தொண்டர்கள் பலரும் குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதே சமயம், செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி சத்திய பாமா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளையும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இவ்வாறு, இபிஎஸ்-க்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த 6 ஆம் தேதி நம்பியூர் நகர பேரூர் கழக நிர்வாகிகள் 300 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்தனர். அதேபோல், கோபி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 1000 க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவ்வாறு, அதிமுக முக்கிய பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதன் மூலம் அதிமுக-வில் மேலும் குழப்பங்கள் அதிகரித்தன.
இத்தகைய சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித்ஷா-வை சந்தித்து பேசுவதற்காக செங்கோட்டையன் டெல்லி செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் பரவியது. இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் ”மனது சரியில்லாததால் ஹரித்வாருக்கு ராமனை தரிசிப்பதற்காக செல்கிறேன்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறேன் என்று கூறியதோடு மேலும் பல விஷயங்களைக் குறித்தும் பேசியிருக்கிறார்.
”டெல்லியில் அமித்ஷா-வை சந்தித்து பேசினேன்”
செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் பேசும்போது, ”நேற்று பயணம் செய்கின்ற பொழுது ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். டெல்லி சென்றவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கின்ற அனுமதி எனக்கு கொடுக்கப்பட்டது. அந்த சந்திப்பில், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவரிடம் எடுத்துச் சொன்னோம். தொடர்ந்து இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன” என்று கூறினார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
”டெல்லி சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது” - நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”செங்கோட்டையன் மற்றும் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி எனக்கு தகவல் வரவில்லை. அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். கட்சியில் இருந்து உத்தரவிட்டு இருக்கிறார். எங்களைப் பொறுத்த அளவிற்கு ஒன்று சேர வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் செங்கோட்டையன் ராமர் கோவில் போவதாக கூறி சென்றார். அவர் டெல்லி சென்றது குறித்து எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
”எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று ஒன்றிணைந்து செயல்படுகிறோம்”
17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு அதிமுக எம்.பி தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், எனக்கு செங்கோட்டையன் பேட்டி அளித்தது தெரியாது, நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஒன்றுபட்ட இயக்கமாக இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
ஓ. பன்னீர் செல்வம் கருத்து !
செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், "அதிமுக ஒன்றிணைய வேண்டும் என மூன்றாண்டுகளாக கூறி வருகிறேன். அதை முன்னெடுத்திருக்கும் செங்கோட்டையனின் எண்ணத்திற்கும் செயலுக்கும் வாழ்த்துகள்" என்று கூறினார்.