“நான் பீ டீம் அல்ல.. அவர்தான் ஏ1” - கே.பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் காட்டம்!
“நான் பீ டீம் அல்ல.. அவர்தான் ஏ1” என கே.பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் காட்டமாய் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கோபியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக பேசியிருந்தார் செங்கோட்டையன். அப்பொழுது, “எடப்பாடி பழனிசாமிக்கு முன்பு கட்சிக்கு வந்தவன். அவருக்கு சீனியர். ஒரு மூத்த தலைவரான எனக்கு நீக்கும் முன்பு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. கழகத் தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை எம்.ஜி.ஆர் அவர்கள் 1975-ல் கொண்டு வந்தார். தற்காலிக பொதுச் செயலாளர் தான். நிரந்த பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் சொல்லவில்லை.
அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. 53 ஆண்டு காலம் கட்சியில் இருக்கும் என்னை தற்காலிக பொதுச் செயலாளர் எப்படி நீக்க முடியும் என்பதை வழக்கறிஞர் மூலம் ஆய்வு செய்ய இருக்கிறேன். அதன்பின் வழக்கு தொடர்வேன். கொடநாடு கொலை சம்பத்திற்கு ஏன் இதுவரை குரல் கொடுக்கவில்லை. திமுகவிற்கு எதிராக அவர் ஏன் பேசவில்லை. நான் பி டீமில் இல்லை; அவர் தான் ஏ1-ல் இருக்கிறார் மனவேதனை அடைகிறேன்.. வருத்தப்படுகிறேன். கண்ணீர் சிந்துகிறேன்.. விதியின் அடிப்படையில் அல்லாமல் சர்வாதிகாரப் போக்கால் உறுப்பினர் பொறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

