வாச்சாத்தி | ”என்னுடைய வேகமான செயல்பாடுகளை தடை செய்யும் நோக்கில்” - செங்கோட்டையன் விளக்கம்
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, செங்கோட்டையன் கடந்த நவம்பர் மாதம் 27- ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து, அவருக்கு தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவரது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தபோது தவெக தொண்டர்களால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், நவம்பர் 30 ஆம் தேதி கோபிசெட்டிப்பாளையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பழனிசாமி, ”இரண்டு மூன்று ஆண்டுகளாக அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன்; அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்” என செங்கோட்டையனை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய செங்கோட்டையன், “அதிமுகவின் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டார்கள். இது, கோபிசெட்டிப்பாளையம் மக்களுக்கு நன்றாக தெரியும். ஒரு இயக்கத்திலிருந்து ஒருவர் பிரிந்து சென்ற பிறகு விமர்சனம் செய்வது என்பது நல்ல நடைமுறையாக இருக்காது, அதை அவர் பின்பற்ற வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தான் பேசினேனே தவிர, அதிமுகவிற்கு எதிராக செயல்படவில்லை.
என் மீது குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நீண்ட நாள் ஆசை இருந்தது. தற்போது அந்த கனவுகள் நிறைவேறி உள்ளது. அவருக்கு இது வெற்றியாக இருக்கலாமே தவிர, என்னை பொருத்தவரை என்னுடைய பயணங்கள் சரியாக இருக்கும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வாச்சாத்தி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆனால், பல்லாண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வேகமான செயல்பாடுகளை தடை செய்யும் நோக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.

