”அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” - செங்கோட்டையன் பதிலடி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வழக்கமான திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன் விஜயால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது. தமிழகத்தில் பெரும்பான்மையான இளைய தலைமுறையினரின் வாக்கு வங்கியை தவெக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், எங்களுடைய அரசியல் எதிரி எனக் கூறி திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த தவெக மீது, அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பபட்டு வந்தது. அப்போது, தவெகவை அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அழைக்க அதிமுக பேசிவருவதாகவும், ஆனால் விஜயே முதல்வர் வேட்பாளர் என்ற முடிவில் தவெக உறுதியாக இருந்ததால் அதிமுக தவெக கூட்டணி உறுதியாகவில்லை எனவும் பேசப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தான், அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தங்கள் என்.டி.ஏ கூட்டணியை பலப்படுத்தி வந்தது. ஆனாலும் தொடர்ந்து, விஜயை தங்கள் கூட்டணி பாஜக மற்றும் அதிமுக அழைத்து வந்த நிலையில், விஜய் அதை ஏற்கவில்லை. இந்த சூழலில் தான், விஜய் தான் கலந்துகொண்ட அடுத்தடுத்த கூட்டங்களில் திமுகவுடன் அதிமுகவையும் சேர்த்து விமர்சிக்கத் தொடங்கினார். இதையடுத்து, அதிமுக தரப்பில் இருந்தும் அதற்கு பதிலடி கொடுத்துவரப்பட்டது.
அதன்படி, பிப்ரவரி 2 ஆம் தேதி மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக தலைமையில் மற்றும் பலர் என அதிமுகவை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஜயின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துப் பேசினார். அப்போது, “எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன, கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் தலைமை தாங்குகின்றன என்பது குறித்து விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை. கரூர் துயரம் நிகழ்ந்து 70 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை. ஒருமுறையாவது விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தால்தான் விஜய்க்கு நிலவரம் தெரியும். அவர் ஊழல் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்திருக்கும் ஒருவரே ஊழல் குற்றவாளிதான், விஜய் யாரைக் குறிப்பிடுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்திருக்கும் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார். அதில், ”தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இதனால், மற்ற கட்சிகளுக்கு எங்களை பார்த்து தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே, அதிமுகவினரும் பயத்தில் இருக்கின்றனர். அதனால்தான் எங்கள் தலைவர் விஜயை பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டு எங்கள் தலைவர் முதல்வராகுவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

